மயானத்தையும் விட்டு வைக்காத இராணுவம், மீட்டுத்தருமாறுகோரும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
மயானத்தையும் விட்டு வைக்காத இராணுவம், மீட்டுத்தருமாறுகோரும் மக்கள்..

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு உள்ள ஆசைப்பிள்ளை செம்பாட்டு மயானத்தை மீள கையளிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எழுதுமட்டுவாழ் வடக்கில் ஆசைப்பிள்ளை (ஆசைப்பிள்ளை ஏற்றம்) என்பவர் தனது காணியில் 30 பரப்பை மயானத்திற்கு வழங்கி இருந்தார். 

குறித்த மாயனத்தை கடந்த 50 வருட காலத்திற்கு மேலாக எழுமட்டுவாழ் தெற்கு , வடக்கு , கரம்பகம் மற்றும் மிருசுவில் வடக்கு ஆகிய கிராம சேவகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். 

அந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதியினை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து இருந்தனர். 

பின்னர் மீண்டும் 2011ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதன் போது ஆசைப்பிள்ளை ஏற்றம் என அழைக்கப்படும் எழுமட்டுவாழ் பகுதியில் ஆசைப்பிள்ளைக்கு சொந்தமான காணியினை இராணுவத்தினர் சுவீகரித்து பாரிய இராணுவ முகாமை அமைத்துள்ளனர். 

குறித்த முகாம் பகுதியினுள் ஆசைப்பிள்ளையால் மயான பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட காணியினையும் சுவீகரித்தே இராணுவ முகாம் அமைக்கபட்டு உள்ளது. 

அதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் வேறு ஒரு இடத்திலேயே தகன கிரியைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதனால் மயானம் அமைந்துள்ள காணியை மீள ஒப்படைக்குமாறு அப்பகுதி மக்கள் பல தடைவைகள் இராணுவத்தரப்பிடம் கோரிக்கை விடுத்த போது , அங்கு மயானம் இருந்தது தமக்கு தெரியாது என கூறி வருகின்றனர். 

இந்நிலையில் தமது மயானத்தை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டு தர சம்பந்தப்ப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு