பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, சந்தேக நபரின் பிணை மனு நிராகரிப்பு..
தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
“சந்தேகநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவற்றின் சில ஆவணங்கள் மன்றில் இன்னும் முன்வைக்கப்படவில்லை. எனவே சந்தேகநபரைப் பிணையில் விடுவிப்பது பொருத்தமற்றது.
அவர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. சந்தேகநரின் விளக்கமறியல் வரும் 27ஆம் திகதிவரை நீடிக்கப்படுகிறது” என்று மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா பிணை விண்ணப்பம் மீதான கட்டளையை வழங்கினார்.
வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.
அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் கடந்த ஜூன் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் கடந்த மாதம் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டு அவரது சட்டத்தரணியால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தி.அர்ஜூனா, ஆசிரியரைப் பிணையில் விடுவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிணை விண்ணப்பம் மீதான கட்டளை கடந்த 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் என மல்லாகம் நீதிவான் நீதிமன்று அறிவித்திருந்தது.
எனினும் பிணை விண்ணப்பம் மீதான கட்டளையை தயார்படுத்தவில்லை என அறிவித்த மன்று, சந்தேகநபரின் விளக்கமறியலை இன்றுவரை நீடித்து உத்தரவிட்டது.
சந்தேகநபர் இன்று மன்றில் முற்படுத்தப்பட்டார். அவர் சார்பான பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் விளக்கமறியல் வரும் 27ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.