500 வருடங்களுக்கு முன் மூழ்கிய சீன நாட்டு கப்பலை தேடி யாழ்.அல்லைப்பிட்டியில் அகழ்வு..
யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில் சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து , சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன், இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியதாகவும், அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் கடந்த 1980ஆம் ஆண்டு கால பகுதியில் ஆரம்ப ஆய்வில் சீன நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அதன்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் ஆய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது சீன அரசு உத்தியோக பூர்வமாக இலங்கை அரசிடம் எழுத்தில் விண்ணப்பித்து இரு நாட்டு அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் தற்போது சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து அல்லைப்பிட்டி கடற்பகுதியில் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் ஒல்லாந்தர் கால கோட்டை மற்றும் அதற்கு முற்பட்ட கால துறைமுக சான்றுகளை மீட்கும் வகையிலும் இலங்கை தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை ஆரம்பித்து உள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பருத்தித்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அங்கிருக்கும் வரலாற்று தொல்லியல் சான்றுகளை மீட்பதற்காக தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் குறித்த இரு ஆய்வு பணிகள் தொடர்பிலான முழுமையான தகவல்களை உத்தியோக பூர்வமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.