நாவற்குழி மக்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு 9ம் திகதி வரை ஒத்திவைப்பு..
யாழ்ப்பாணம் தென்மராட்சி நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற மக்களை அரச காணியில் இருந்து வெளியேற்றுவதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையால் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுமார் 62 குடும்பங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 34 குடும்பங்களுக்கு எதிரான வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் குடியிருப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகினர். இந்த விடயம் தொடர்பாக வீடமைப்பு அமைச்சரோடு பேசி சுமூகமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு நீண்ட தவணை ஒன்றை வழங்குமாறு சட்டத்தரணிகளால் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 9 திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில் நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் இருந்து வெளியேற்றுவதற்கான வழக்கினை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இப்படியாக இவர்களை வேளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிந்தவுடன் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) பாராளுமன்றத்திலே இந்த அதிகார சபைக்கு பொறுப்பான அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் நான் இந்த விடயத்தை குறித்து கேள்வி எழுப்பிய போது அரச காணிகளில் இருந்து வெளியேற்றுவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் இந்த விடயம் சம்பந்தமாக தனக்கு நேரடியாக தெரியாதென்றும் ஒரு நாள் கால அவகாசத்திற்குள்ளே இதைக்குறித்து தான் விசாரித்து அறிந்து பதில் சொல்வதாகவும் அவர் எனக்குச் சொல்லியிலுந்தார்.
நேற்றைய தினம் பின்னேரமே அவருடைய அதிகாரிகள் என்னோடு தொடர்பு கொண்டு இந்த விபரங்கள் அனைத்தையும் எடுத்திருந்தார்கள். ஆனாபடியினால்தான் இன்றைய தினம் வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்திலே வந்த போது மக்கள் சார்பிலே ஒரு விண்ணப்பத்தைச் செயதிருந்தோம்.
அமைச்சர் இப்படியான ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கின்ற காரணத்தினாலே ஒரு நீண்ட திகதியை வழங்குமாறு அந்த கால இடைவேளிக்குள் நாங்கள் அமைச்சரோடு பேசி சுமூகமாக தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் காணக்கூடியதாக இருக்கும் என்று செய்த விண்ணப்பத்தை நீதின்றம் ஏற்றுக்கொண்டு ஒரு நீண்ட திகதியாக நவம்பர் 9 ம் திகதி மீளவும் இந்த வழக்குகளை கூப்பிடுமாறு பணித்திருக்கிறார்.