SuperTopAds

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையால் பண்ணையாளர் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையால் பண்ணையாளர் பாதிப்பு..

பால் கொள்வனவுக்கான கொடுப்பனவு ஒன்றரை மாதமாக வழங்கப்படாத நிலையில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சு ட்டிக்காட்டியுள்ளதுடன் அமைச்சர் விஜிதமு னிசொய்சாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அமைந்துள்ள சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், 

மல்லாவி, செட்டிகுளம், முருங்கன் ஆகிய பால் குளிரூட்டும் நிலையங்களில் நாளாந்தம் ஏறத்தாழ ஐயாயிரம் லீற்றர்  பால் குளிரூட்டப்படுகிறது. 

சாவகச்சேரியில் 411 பண்ணையாளர்களும், கிளிநொச்சியில் 1496 பண்ணையாளர்களும், முல்லைத்தீவில் 1650 பண்ணையாளர்களும், ஒட்டுசுட்டானில் 1068 பண்ணையாளர்களும், 

மல்லாவியில் 658 பண்ணையாளர்களும், செட்டிகுளத்தில் 486 பண்ணையாளர்களும், முருங்கனில் 1376 பண்ணையாளர்களுமாக வடக்கு மாகாணத்தில்  ஏழாயிரத்து நூற்று நாற்பத்தைந்து 

(7145) பண்ணையாளர்கள் பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு பால் விநியோகம் செய்கின்றார்கள். 

இவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பாலுக்கான கொடுப்பனவு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒன்றரை மாதமாக இக்கொடுப்பனவுகள் 

வழங்கப்படவில்லை. இதனால் பால் விற்பனையையே தமது பிரதான சீவனோபாயமாக கொண்டுவாழும் ஏழாயிரத்துக்கும் அதிகமான பண்ணையாளர்கள் பாரிய இடர்களை எதிர்கொள்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீண்டிருந்த போரினால் தமது உறவுகளையும், உடமைகளையும், பொருளாதார இயலுமைகளையும் இழந்து மீளக்குடியேறிய பின்னர் வாழ்வாதார உதவித்திட்டங்கள் மூலமும், 

வங்கிக்கடன்களைப் பெற்றும் பால்மாடுகளை கொள்வனவு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தமது வாழ்க்கைச்செலவை நிர்வகிக்கும் இப்பண்ணையாளர்களுக்கு 

தொடர்ச்சியாக பால் கொள்வனவுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாததால் வங்கிக்கடன்களை செலுத்த முடியாமலும், 

அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும், தமது குழந்தைகளின் கல்விச்செலவுகளுக்கு முகம்கொடுக்க முடியாமலும் பொருளாதார ரீதியாக அல்லல்ப்படுகிறார்கள்.

மலையகப் பகுதிகளிலும், வேறு சில மாவட்டங்களிலும் இக்கொடுப்பனவுகள் சீராக வழங்கப்படும் அதேவேளை ஏற்கனவே 

பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்கொண்டு மெல்லமெல்ல அவற்றிலிருந்து மீண்டெழும் எமது மக்களின் வாழ்வியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே தயவுசெய்து இவ்விடயத்தில் தாங்கள் அதிக அக்கறை காட்டி வடக்குமாகாணப் பண்ணையாளர்களுக்கான கொடுப்பனவுகளை 

குறித்த காலப்பகுதிக்குள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.