கடற்படைமுகாமிற்கு காணி வழங்க மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மறுப்பு..
மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 கடற்படைத் தளத்திற்கு கடற்கரையோரத்தில் கோரப்படும் இடங்களை வழங்க முடியாது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இணைத்தலைவர்கள் தலமையில் இடம்பெற்றது . இதன்போதே கடற்படையினரின் கோரிக்கை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதன்போது இணைத் தலைவர்களில் ஒருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த அனுமதியை ஆட்சேபித்து உரையாற்றினார்.
போர் முடிவுற்ற பின்பும் புதிதாக படை முகாம் அமைக்கும் தேவை கிடையாது. அந்த வகையில் புதிதாக அமைக்கும் 4 கடற்படையினரின் தேவைக்காக தலா 2 ஏக்கர் வீதம் கடற்கரை பிரதேசத்தில் 8 ஏக்கர்
நிலம் என்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகவே அமையும். அதாவது மன்னாரில் உள்ள கடற்படை தளங்கள் பல சுற்றுலாமையங்கள் போன்றே இயங்குகின்றன. அதனால் குறித்த நிலங்களை வழங்க முடியாது.
மன்னாரின் கடற்கரையோரம் பல கடற்படையினர் மட்டுமன்றி ஏனைய திணைக்களங களின் பிடியில் இருப்பதனால் மீனவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
அவர்களிற்கான திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் மேலும் நிலத்தை கோருவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாகவே அமையும். என்றார்.