பிரதமரின் 200மில்லியன் ரூபாய் திட்டத்தில் மீண்டும் வெட்டுக் கொத்து..
பிரதமர் அலுவலகத்தால் 200 மில்லியன் ரூபாவில் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பெறுமதியில் மீண்டுமொரு முறை வெட்டு வீழ்ந்துள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிராமிய அபிவிருத்திக்காக பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக தலா 200 மில்லியன் ரூபாவில் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக 25 மாவட்டச் செயலகங்களிற்கும் அறிவுறுத்தப்பட்டு அதற்கான திட்டங்களை தயார் செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பல மாவட்டங்களில் திட்டத்தயாரிப்பின்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் தமது ஆலோசணை பெறப்படவில்லை என மக்கள் பிரதிநிதிகள் தமது அதிருப்தியினையும் வெளியிட்டிருந்தனர்.
இருப்பினும் தேசிய ரீதியில் 330 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளமையினால் குறித்த திட்டத்திற்கு 66 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படும் என்பதன் அடிப்படையில் மேற்படி திட்டத்தினை 100 மில்லியன் ரூபாவில் மட்டுமே முன்னெடுக்க முடியும் என அமைச்சு இறுதியில் முடிவு செய்து மாவட்டச் செயலகங்களிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 100 மில்லியன் ரூபாவில் திட்டம் முன்னெடுப்பமானாலும் 33 ஆயிரம் மில்லியன் ரூபா தேவை படுவதனால் ஒதுக்கிய நிநிகளில் இருந்து குறித்த நிதியை ஒரே தடவையில் பெறுவதில் உள்ள நெருக்கடியினை திறைசேரி சுட்டிக்காட்டியதனையடுத்து
தற்போது மேற்படி திட்டத்திற்காக பிரதேச செயலகம் ஒன்றிற்கு 40 மில்லியன் ரூபா மட்டுமே இந்த ஆண்டு அனுமதிக்கப்படும் என நேற்று முன்தினம் மாவட்டச் செயலகங்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 330 பிரதேச செயலகத்திற்கும் 40 மில்லியன் ரூபா வீதம் திட்டத்திற்காக 13 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் 200 மில்லியன் ரூபாவிற்கு திட்டங்களை தயார் செய்த மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் தற்போது 40 மில்லியனாக குறைப்பதில் பெரும் நெருக்கடியினை எதிர்கொள்கின்றதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.