வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தது இந்தியா..141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !!
வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தது இந்தியா..141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பெரேரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து(208*) கைகொடுத்ததன் மூலம் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 392 ரன்கள் எடுத்தது.
ரோஹித்தை தவிர இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களும், தவான் 68 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாத்தியமில்லாத இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை வீரர்கள் அங்கிலோ மேத்யூஸை(111*) மட்டும் தனியாக போராடவிட்டு விட்டு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி, 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமநிலை பெற்றுள்ளது.