இந்த நாடு ஒரு பாரிய யுத்தத்திற்கு முகம் கொடுத்தமைக்கு காரணம் உண்டு்..

ஆசிரியர் - Editor I
இந்த நாடு ஒரு பாரிய யுத்தத்திற்கு முகம் கொடுத்தமைக்கு காரணம் உண்டு்..

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம்  பட்ரிஸியா ஸ்காட்லாண்ட் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தனை  இன்று பாராளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன்  ஆயுத போராட்டம் முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை என்பதனை சுட்டிக்காட்டினார். மேலும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன.

அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் நாட்டு மக்களிற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள், பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் அரசாங்க கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நஷ்ட ஈடு,காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு, மிக கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை, 

போன்றன அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும், எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனவும் வலியுறுத்தினார். புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதிலும் இத்தகையான ஒரு பொருத்தனை உள்ளதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள் புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் பிரேரணையானது பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களின் நிமித்தம் இதனை முன்னெடுத்து செல்வதில் அரசாங்க தரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார். 

மேலும், இந்த நாடு பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகம் கொடுத்தமைக்கு காரணங்கள் உள்ளன என்பதனை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்கள், ஒருவர் உறுதியாக இல்லாதவிடத்து இப்பிரச்சினையை கையாள முடியாது என்றும், கடும் போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி இவற்றினை ஒருவர் கைவிடமுடியாது என்றும் கூறிய இரா சம்பந்தன் அவர்கள், அரசாங்கமானது உறுதியாக நின்று நாட்டினை சரியான பாதையில் நடத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார். 

மேலும் புதிய அரசியல் யாப்பின் உருவாக்கமானது நாட்டினை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்லும் மிகப் பாரிய ஒரு கருமமாகும் என்பதனையும் வலியுறுத்தினார். இலங்கையில் ஜனநாயக மேம்பாடு,சட்ட ஒழுங்கு,நல்லாட்சி,மற்றும் சூழல் மாசடைதலை தவிர்த்தல் உள்ளடங்கலான பல விடயங்களில் பொதுநலவாய செயலகத்தின் பங்களிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரை தெளிவுபடுத்திய செயலாளர் நாயகம், 

புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு தமது பணியகம் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் எனவும் தெரிவித்தார். மேலும் மிதமான தமது செயல்களின் மூலம் சமாதானத்திற்கான ஒரு தூதுவராக இரா. சம்பந்தன் இருப்பதனையும் செயலாளர் நாயகம்  பாராட்டினார். இந்த நாட்டில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தினையும் ஏற்படுத்துவதற்கு தனது  முழுமையான பங்களிப்பு இருக்கும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன்  பொதுநலவாயம் உள்ளடங்கலான சர்வதேச சமூகத்திற்கும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதில் பங்குண்டு என்பதனையும் வலியுறுத்தினார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு