SuperTopAds

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் நாளை ஆரம்பம்

ஆசிரியர் - Admin
இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் நாளை ஆரம்பம்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டித் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

2007-ம் ஆண்டுக்கு பிறகு 2 முறை ஆடிய டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. இதனால் இந்த முறை விராட்கோலியின் படை இங்கிலாந்து மண்ணில் ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடும்.

11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு கேப்டன் கோலிக்கு கடும் சவாலாக இருக்கும்.

தவான், புஜாரா மோசமான நிலையில் இருப்பது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தும். கோலி, முரளிவிஜய், ரகானே, ராகுல் ஆகியோரது பேட்டிங்கை பொறுத்து அணியின் நிலை இருக்கிறது.

தொடக்க வீரர் வரிசையில் இருந்து தவான் கழற்றிவிடப்படலாம். முரளிவிஜய்யும், ராகுலும் தொடக்க வீரராக ஆடலாம்.

இதேபோல விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக், ரிசப் பாண்ட் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம். தினேஷ்கார்த்திக் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார். மேலும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவருக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது.

வேகப்பந்து வீரர் புவனேஸ்வர்குமார் ஆடாதது பாதிப்பே. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இதனால் உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது‌ஷமி ஆகியோர் இடம் பெறுவார்கள்.

சுழற்பந்து வீரர் தேர்வு தலைவலியை ஏற்படுத்தும். அஸ்வின், ஜடேஜா, குல்தீப்யாதவ் ஆகியோரில் இருவர் இடம் பெறுவார்கள். குல்தீப்யாதவ் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார் என்பதால் அவர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஜடேஜா நீக்கப்படலாம்.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் நெருக்கடி கொடுக்கலாம். அவர் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர் ஆவார். 540 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதேபோல ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

பேட்டிங்கில் கேப்டன் ஜோரூட், கூக், பட்லர், பேர்ஸ்டோவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.

டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), முரளிவிஜய், தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது ‌ஷமி, குல்தீப்யாதவ், ‌ஷர்துல் தாகூர், பும்ரா.

ஜோரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், மோயின் அலி, ஜோஸ் பட்லர், ஸ்டூவரட் பிராட், பென் ஸ்ரோக்ஸ், ஆதில் ரஷீத், ஜானி பேர்ஸ்டோவ், கூக், கீட்டன் ஜென்னிங்ஸ், சாம் குர்ரன், டேவிட் மலன், ஜேமி போர்ட்டர்.