வடகிழக்கு அபிவிருத்தியை விரைவுபடுத்த அமைச்சரவை உபகுழு, சீ.வி புறக்கணிப்பு..
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை விரைபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி சிறப்புச் செயணியில் ஆராயப்படும் விடயங்களை அமைச்சரவைக்குத் தெரிய்படுத்தி அவற்றை உடனே நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான முடிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த செயலணியில் முதலாவது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் முதலாவது கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது.
ஜனாதிபதியின் உரை,
ஆரம்பத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். போர் முடிந்து 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் அபிவிருத்தி இடம்பெறவில்லை.
அரசு மேற்கொண்ட திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதாகச் சொல்லியும் அது நடைபெறவில்லை.
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தவேண்டும். இந்தச் செயலணி ஊடாக அதனை நடைமுறைப்படுத்தும்போது இறுக்கமான கண்காணிப்பும் இருக்கவேண்டும்.
திறைசேரி இந்தச் செயலணி ஊடான திட்டங்களுக்கு போதுமான நிதியை வழங்கவேண்டும்.
தனியார் துறையினரின் முதலீடு உள்வாங்கப்படவேண்டும். சிவில் சமூகத்தினரது பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்படவேண்டும்.
கொழும்பு அரசையும், மாகாண அரசையும் ஒருங்கிணைத்துச் செயற்படுவது இந்தச் செயலணியின் முக்கிய நோக்கமாகும் என்று அரச தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.
திட்டங்கள்
அரச தலைவரின் உரையைத் தொடர்ந்து, செயலணியின் செயலர் வி.சிவஞானசோதி உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து வடக்கு –
கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படுகின்ற முக்கிய அபிவிருத்திப் பணிகளின் தொகுப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டுத் திட்டம்
வடக்கு மாகாண ஆளுநர் குரே தனது உரையில், வீடுகளின் தேவை வடக்கு மாகாணத்தில் அதிகமாக இருக்கின்றது. ஆனால் மன்னார் மாவட்டத்தில்
ஏதோவொரு அமைச்சால் அமைக்கப்பட்ட வீடுகள் மக்கள் இல்லாமல் பூட்டப்பட்டிருக்கின்றன. மறுபுறம் அதே மாவட்டத்தில், மாகாணத்தில் வீடுகள் இல்லாமல் மக்கள் இருக்கின்றார்கள்.
அபிவிருத்தி நடவடிக்கைகள் வடக்கில் முன்னெடுக்கப்படும்போது கொழும்பு அரசுக்கும், மாகாண அரசுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இல்லை.
தேசிய உற்பத்திக்கு வடக்கிலிருந்து பங்களிப்புச் செய்யப்படும் வீதம் குறைவாகவே உள்ளது. அதனை ஒருவரும் கவனிக்கவில்லை.
அமைச்சர் சுவாமிநாதன், மன்னார் மாவட்டத்தில் நான் கட்டிய வீடுகள் எதுவும் மக்கள் இல்லாமல் இருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு – கிழக்கு மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் வீடுகளின் கட்டடப் பணிகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில்
ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் 10 ஆயிரம் வீடுகளின் கட்டப் பணிகள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொழிற்சாலைகள்
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் இயங்கிய தொழிற்சாலைகளை மீள இயக்குவது தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அந்தத் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பது சரியாக இருக்குமா? அதனால் பாதிப்புக்கள் ஏதாவது ஏற்படுமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப் பணிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறைமுகம் அபிவிருத்தி, காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, திக்கம் வடிசாலை, கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலை, கிளிநொச்சி குறிஞ்சித் தீவு உப்பளத்
தொழிற்சாலை, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, அம்பாறை சீனித் தொழிற்சாலை, மட்டக்களப்பு கடதாசித் தொழிற்சாலை என்பன தொடர்பிலேயே அறிக்கை சமர்பக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இரு மாகாணங்களிலும் ஆயிரத்து 847 கிலோ மீற்றர் அளவிலான பாதை அபிவிருத்தி செய்யப்படவு ள்ளது. யாழ்ப்பாணம், மயிலிட்டி, மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் இரு மாகாணங்களிலும் கிராமிய பாதைகள், குடிநீர் வசதி, நீர்ப்பாசனம், விவசாயம், பொருளாதார நிலையங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சகல
உட்கட்டமைப்பு வசதிகளிலும் விரிவான அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இராணுவம்
வடக்கு – கிழக்கு அபிவிருத்திச் செயலணியின் ஊடாக முன்னெடுக்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஆளணியை இராணுவத்தினர் வழங்கத் தயாராக இருப்பதாக, இராணுவத் தளபதி சந்திப்பில் கூறியுள்ளார்.
அபிவிருத்திச் செயலணியில் ஆராயும் விடயங்களை அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தி, உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக அமைச்சரவை உபகுழுவை அமைக்கவும் தீர்மானித்துள்ளார்.
இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேறு நிகழ்வொன்றுக்கு சென்றமையால் பங்குபற்றவில்லை ஆனால் அமைச்சர்கள் பங்குகொண்டிருந்தனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இந்தக் கூட்டத்தில் பங்குகொள்ளப்போவதில்லை என ஜனாதிபதிக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
எனினும் பின்னர் இந்த முடிவை மாற்றிக்கொண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முதலமைச்சர் தீர்மானித்தார். பிறகு இறுதி நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கியுள்ளார்.
கூட்டம் தொடங்கிய நேரத்திலேயே செயலணியின் செயலாளருக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.