வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிராக பழைய மாணவர்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிராக பழைய மாணவர்கள் போராட்டம்..

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து பழைய மாணவர்கள்   கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று கல்லூரி முன்றலில் முன்னெடுத்து இருந்தனர். 

கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலர்  இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அமைதிவழியில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் நிறைவில் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் டேவிட் சதானந்தன் சொலமனிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டம் தொடர்பில் பழைய மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது , 

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி இலங்கை அரசியலமைப்புக்கு அமைய நாடாளுமன்றால் ஒப்புதல் வழங்கப்பட்ட தென்னிந்திய திருச்சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கல்லூரியின் ஆளுநர் சபைக்கு தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பதவி வழியாகத் தலைவராக உள்ளார். 

அத்துடன், பாடசாலை அதிபர், பழைய மாணவர்களின் பிரதிநிதி, கல்வியாளர்கள் உள்ளிட்டோர் ஆளுநர் சபையின் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆளுநர் சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய யாழ்ப்பாணக் கல்லூரியின் நிர்வாக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆளுநர் சபையின் கீழான நிர்வாகத்துக்கு அமெரிக்காவிலுள்ள கல்லூரியின் தர்மகர்தா சபை நிதியுதவியை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா, ஆளுநர் சபையில் ஜனநாயகத்தை பேணாமல் செயற்படுகிறார்.

 என கல்லூரியின் பழைய மாணவர்களாலும் நலன்விரும்பிகளாலும் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், அமெரிக்காவிலுள்ள தர்மகர்த்தா சபைக்கு பல மனுக்கள் அனுப்பிவைக்கபட்டன.

அவற்றை ஆராய்ந்த தர்மகர்த்தா சபை. யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையிலும் கல்லூரியின் நிருவாகத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நோக்கில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும். 

சபையின் உப தலைவரான சட்டத்தரணி செல்வி விஜுலா அருளானந்தமும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை இடம்பெறும்வரை கல்லூரிக்கு வழங்கப்படும் நிதியை இடைநிறுத்தவும் தர்மகர்த்தா சபை முடிவு செய்துள்ளது.

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாண கல்லூரியின் அதிபரின் சுயாதீனத்துக்கும் பதவி நிலைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் கீழ் நிலை பதவிகளில் உள்ள சிலர் அண்மைக்காலமாக செயற்படுகின்றனர்.

தென்னிந்திய திருச்சபைக்கும் அதில் உள்ளவர்களின் தேவைகளுக்கும் அமைய, கல்லூரி அதிபரின் ஒப்புதலின்றி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதுடன், 

அவர்களுக்கு பொருத்தமற்ற பாடநெறிகளும் ஆளுநர் சபையின் தலைவரால் வழங்கப்படுகிறது.

சிலர் பொறுப்புமிக்க பதவிநிலைகளில் உள்ளபோதும் தமது வியாபாரத்தையும் கல்லூரிக்குள் முன்னெடுக்கின்றனர். 

ஆசிரியர்கள் சிலர் படப்பிடிப்பாளராகவும் கல்லூரி மாணவர்களை அழைத்து தனியார் கல்வி நிலையத்தையும் நடத்துகின்றனர்.

இந்தச் செயற்பாடுகளை முற்றிலுமாக நிராகரிக்கும் பாடசாலையின் மீது அக்கறை கொண்ட சமூகம், கல்வி விளையாட்டு, 

இணைப் பாடவிதனாச் செயற்பாடுகளில் மாணவர்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வந்தனர்.

எனினும் கல்லூரிச் சமூகத்தின்  ஆலோசனைகள் பரிந்துரைகள் ஆளுநர் சபையாலோ நிர்வாகத்தாலோ ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

மாறாக அதிகார துஷ்பிரயோகங்களே முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாண கல்லூரியின் 150 ஆண்டுகால பாரம்பரியத்தையும் விழுமியங்களையும் பாதுகாப்போம் என பழைய 

மாணவர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் என தெரிவித்தார். 




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு