தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க கோரிக்கை

ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது,
வடக்கு மற்றும் கிழக்கு நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.