இரண்டாம் மொழி கற்கை நெறி இறுதி கலை நிகழ்வு

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திருகோணமலை மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் மற்றும் 150 மணித்தியாலங்கள் இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களின் இறுதி கலை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(23) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கொத்தன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரண்டாம் மொழி வளவாளர் ஐ.எம்.அபூல் ஹசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹிர்பகான் கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஹாதி இஸ்மாயீல் சிறைச்சாலை உத்தியோகத்தர் எம்.எம். முஹம்மட் நகீப் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக இடம் பெற்றன.
2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறி என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த பாடநெறியை சூம் (நிகழ்நிலை) தொழிநுட்பம் ஊடாக நாட்டின் பல்வேறு பகுதிகளை செர்ந்த அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்ததுடன் இப்பாடநெறி ஊடாக சமூக நல்லிணக்கம் பயிலுனர்களிடையே ஏற்பட்ட சம்பவம் இறுதி நிகழ்வில் தெளிவாகியமை சுட்டிக்காட்டத்தக்கது.