SuperTopAds

விரைவில் கைது செய்யப்படுவார் கோட்டா!

ஆசிரியர் - Admin
விரைவில் கைது செய்யப்படுவார் கோட்டா!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் புதிய “முக்கிய புள்ளியை” புனைய அரசாங்கம் முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.     

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கம்மன்பில, முதலில் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து தான். இருப்பினும், நிர்வாகத்தில் உள்ள சில பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் மாற்றுக் கதை உருவாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

"உண்மையான பொறுப்பாளர்கள் இன்னும் நிர்வாகத்திற்குள் இருப்பதால், ஒரு புதிய முக்கிய புள்ளியை உருவாக்க அரசாங்கம் இப்போது விரிவான திட்டத்தில் ஈடுபட்டுள்ளது," என்று அவர் எந்த ஆதாரங்களையும் குறிப்பிடாமல் கூறினார்.

இந்த முயற்சியின் ஒரு அங்கமாகவே முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் குறிவைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். "ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதாயமடைவதற்காக இலங்கையின் உளவுத்துறையினர் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை நடத்தினர் என்ற தவறான கூற்றை நிறுவுவதே இதன் நோக்கம்" என்று அவர் மேலும் கூறினார்.

தாக்குதல்களை இலங்கையின் புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புபடுத்தும் வகையில் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சனல் 4 இன் ஆவணப்படம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி, முன்னாள் விமானப்படைத் தளபதி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணைக் குழு நிராகரித்ததாக கம்மன்பில கூறினார். அரசாங்கம் அவ் அறிக்கையை புறக்கணித்து தவறான கதையை முன்வைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தின் சதியின் முக்கிய சாட்சியான அசாத் மௌலானா, மோசடி மற்றும் அடையாள ஏமாற்றுதல் உட்பட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட்டவர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்காக மௌலானா இலங்கைக்குத் திரும்புவதற்கு அரசாங்கம் உதவுவதாகக் கூறப்படும் அதேவேளையில் அவர் செய்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நசுக்குவதாக கம்மன்பில கூறினார்.

மௌலானாவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம், பொலிஸ் விசாரணைகளில் அரசியல் தலையீடு மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களின் கதையை மாற்றியமைக்கும் முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக கம்மன்பில அரசாங்கம், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எட்டு கேள்விகளை முன்வைத்தார்.

"இந்த அழுத்தமான கவலைகள் குறித்து அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது பொலிஸ் ஊடகப் பிரிவிடமிருந்து உடனடி பதில்களைக் கோருகிறோம்," என்று அவர் கூறினார்.