SuperTopAds

மாவையின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்!

ஆசிரியர் - Admin
மாவையின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்!

தமிழ் மக்களின் இலக்கினை அடைவதற்கான தமிழ்த் தேசியக் கட்சிகிளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்ற சேனாதிராஜாவின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.     

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

இறுதி அஞ்சலி நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் நேசித்த உன்னதாமான பெருந்தலைவரை நாங்கள் இழந்திருக்கின்றோம். தன்னுடைய வாழ்க்கையின் நீண்ட நெடிய காலத்தினை தமிழ்த் தேசியத்துக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்த பெருந்தலைவராக சேனாதிராஜா இருக்கின்றார்.

சேனாதிராஜா வரித்துக்கொண்ட தேசியப்பாதை மிகவும் பெறுமதியானது. அவருடை பாதங்கள் படாத வடக்கு,கிழக்கு பகுதிகள் கிடையாது. அவர் மக்களுக்காக ஆற்றிய பல தொண்டுகள் மிக முக்கியமாவை.

தமிழ்த் தேசிய விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்த எமது தேசத்தின் தந்தையை நாம் இழந்திருக்கின்றோம். ஆகவே விடுதலை நோக்கிய அவருடைய இலக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது கட்டமாகின்றது என்றார்.

புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

மாவை.சேனாதிராஜாவின் பிரிவானது தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திலும், தமிழ் அரசியல் சரித்திரத்திலும் மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதோடு, அர்ப்பணிப்பான பயணமானது என்றுமே மிகவும் முக்கியமானதொரு முன்னுதாரணமாகும்.

சேனாதிராஜா சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்திலும் கூட, தமிழீழம் வாழ்க என்று அவரை சித்திரவதைக்குப் பயன்படுத்தி குண்டூசிகளால் எழுதிய பற்றுறுதிமிக்க தலைவராக காணப்படுகின்றார்.

அவருடன் பல விடயங்களில் இணைந்தும், அவருடைய வழிகாட்டல்களிலும் செயற்பட்டவர் என்ற அடிப்படையில் அவருடைய இலக்குகள் வெற்றியடைதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவது காலத்தின் கடமை என்பதோடு அவருக்கு செய்கின்ற அஞ்சலியாகவும் அமையும் என்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைத்து தலைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒரே குரலில் இயங்க வேண்டும் என்ற இலட்சிய சிந்தனையைக் கொண்டவராக மாவை.சேனாதிராஜா இருந்தார்.

அவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களாக நாம் பல்வேறு தவறுகளை இழைத்திருக்கின்றோம். அவற்றை திருத்துவதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

சேனாதிராஜாவின் கனவான அனைவரும் ஒன்றிணைந்து விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும் பயணத்தினை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனையினை நாம் சீர்தூக்கிப்பார்த்து அனைவரும் கூட்டிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. அதற்கான உறுதி மொழியை அவரது இறுதி நாள் நிகழ்வில் மேற்கொள்வது சாலப்பொருத்தமானதாகும் என்றார்.

ரெலோ அமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவிக்கையில், மறைந்த பெருந்தலைவர் மாவை. சேனாதிராஜா இறுதி மூச்சுவரையில் உண்மையாக செயற்பட்ட ஒரு தலைவராக இருக்கின்றார். தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்து பயணித்த ஒருவராக உள்ளார்.

சேனாதிராஜாவின் வரலாற்றுப் புகைப்படமொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் உடன் இருக்கின்றார். அந்த வகையில் ரெலோவுடன் மட்டுமல்ல சேனாதிராஜா அனைத்து இயக்க உறுப்பினர்களுடனும் இணக்கமாகச் செயற்பட்ட அவர்களின் மரியாதையை வென்றெடுத்த தலைவராக உள்ளார் என்றார்.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா தெரிவிக்கையில், மாவை.சேனாதிராஜா, அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் போன்று நீண்ட வரவேற்பையும் விமர்சனங்களையும் கொண்டதொரு தலைவராக இருக்கின்றார். எனினும் இறுதி வரையில் எந்தவொரு சலுகைகளுக்கும் விலைபோகாத தலைவராக தொடர்ச்சியாக செயற்பட்டவராக காணப்படுகின்றார். அவருடைய மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும் என்றார்.

போராளிகளின் சார்பில் உரையாற்றிய ஈஸ்வரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால், அதிகமாக நேசிக்கப்பட்டதொரு தலைவராக உள்ளார். அவர் நேரடியாக சேனாதிராஜாவிடத்தில் தேர்தல் போட்டியிடுவதற்காக கட்சியின் சின்னத்தைக் கோரியதோடு சேனாதிராஜா தலைமை தாங்குவதால் அக்கட்சியின் மீது அதிகமான நம்பிக்கையையும் கொண்டிருந்தார். அவ்விதமான அங்கீகாரங்களை தன்னகத்தே கொண்ட பெருந்தலைவரே சேனாதிராஜா என்றார்.