ஆளும்தரப்பு உறுப்பினர்களையும் இணைத்து செயற்பட உத்தேசம்!
அரசியல் தீர்வு மற்றும் வட, கிழக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பொது விவகாரங்களில் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களையும் இணைத்து ஓரணியாக செயற்படுவதற்கு உத்தேசித்திருப்பதாக ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழ்த்தேசியக்கட்சிகள் கூட்டிணைந்து புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஒரு பொதுவான தீர்வுத்திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்கவேண்டும் .
அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அப்பால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, வட- கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பொது விவகாரங்களில் வட, கிழக்கு தமிழ்த்தேசியக்கட்சிகளின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஆளுந்தரப்பான தேசிய மக்கள் சக்தியின் வட, கிழக்கு உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு ஓரணியாக செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். அதனை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகளை எதிர்வருங்காலத்தில் முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும் அவர் கூறினார்.