கெஹலியவின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்ந்தும் முடக்கம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்புறுதி திட்டங்கள் ஆகியவற்றை செயற்படுத்துவதை தடுக்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துக் கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களின் 97 மில்லியன் ரூபாயுக்கும் அதிக பெறுமதியான நிலையான வங்கி வைப்புக்கள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்துவதற்கு தடை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன்படி, இந்த உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மேலும் நீடிக்குமாறு லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.