SuperTopAds

வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாளுங்கள் - அமைச்சர்களுக்கு ஐனாதிபதி அறிவுரை..

ஆசிரியர் - Editor I
வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாளுங்கள் - அமைச்சர்களுக்கு ஐனாதிபதி அறிவுரை..

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அந்த அதிகாரத்தை பாதுகாக்க புதிய அமைச்சர்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும்.

"வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் சமமானவை." என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் வரலாற்றின் அரசியல் வரைபடம் மாற்றமடைந்துள்ளதாகவும், பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்க முயற்சித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் தேவை என தெரிவித்த ஜனாதிபதி, தோற்றவர்களை காயப்படுத்திய வரலாற்றை மாற்றி புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்தேர்தலில் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக ஊடக செயற்பாட்டாளர்களாக முன்வந்து செயற்பட்ட இளம் சமூகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கியதாகவும் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எழுந்து நின்றதாகவும், அவர்கள் அனுபவிக்கும் அடக்குமுறையே இதற்குக் காரணம் என்று கூறிய ஜனாதிபதி. இந்தத் தேர்தல் முடிவு அவர்களின் சுதந்திர பேச்சு என்றும் குறிப்பிட்டார்.

எனவே, பிரஜைகளுக்கு பகுதியளவு சுதந்திரத்தை வழங்க தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.