2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் - 10 சுவாரசிய தகவல்கள்

ஆசிரியர் - Editor II
2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் - 10 சுவாரசிய தகவல்கள்

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது.

உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை நேயர்களுக்காக வழங்குகிறோம்.

1. ஒரு அணியில் ஆட்ட வீரராகவும், ஒரு அணிக்கு மேனேஜராகவும் இருந்து உலக கோப்பையை வென்ற மூன்றாவது நபரானார் டெஸ்சாம்ப்ஸ். இதற்கு முன்னதாக பிரேசிலின் மரியோ ஜகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்குன்பெர் இந்தச் சிறப்பை பெற்றிருந்தனர்.

2. நாற்பத்தெட்டு வருடத்திற்கு பிறகு இறுதிப்போட்டியில் நான்கு கோல் அடித்த அணி பிரான்ஸ். 1970-ல் பிரேசில் இத்தாலியை 4-1 என வென்றிருந்தது.

3. உலக கோப்பை இறுதியாட்டத்தில் முதல் முறையாக விளையாடும் ஓர் அணி தோல்வியடைவது 1974க்கு பிறகு இதுதான் முதல் முறை. குரோஷியாவுக்கு இது முதல் உலக கோப்பை இறுதிப்போட்டி.

4. உலக கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் தனது அணிக்கு எதிராக கோல் அடித்த ஒரே வீரர் ஆனார் குரோஷியாவின் மண்ட்ஜூகிக்.

5. உலக கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது இளையவர் ஆனார் பிரான்ஸின் ம்பாப்பி. அவருக்கு வயது 19 வருடம் 207 நாள்கள். இறுதிப்போட்டியில் இளம் வயதிலேயே கோல் அடித்த பெருமை பிரேசிலின் பீலேவுக்குச் சேரும். அவர் 1958-ல் 17 வருடம் 249 நாள்கள் வயது இருக்கும்போதே கோல் அடித்தார்.

6. உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பிரான்ஸ் அணிக்காக இதுவரை 10 கோல்கள் அடித்திருக்கிறார் கிரீஜ்மன். உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பத்து நாக் அவுட் போட்டிகளில் 12 கோல்களை தானாக அடிக்கவோ அல்லது இன்னொரு வீரர் அடிக்கவோ உதவியுள்ளார் ஆன்டோனி கிரீஜ்மன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் வீரர் ஒருவர் நாக்அவுட் போட்டிகளில் செய்த மிகப்பெரிய சாதனை இது. முன்னதாக ஜினடின் ஜிடேன் எட்டு கோல்களை அடித்ததே பிரான்ஸ் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.

பெரிசிச்

7. பெரிய கால்பந்து தொடர்களில் 11 கோல்களுக்கு நேரடி காரணமாக இருந்திருக்கிறார் பெரிசிச். வேறு எந்த குரேஷிய வீரரும் இச்சாதனையை செய்யவில்லை.

8. உலககோப்பை இறுதிப்போட்டியில் 1982-க்கு பிறகு பெனால்டி பகுதிக்கு பிறகு அதாவது அவுட்சைடு தி பாக்ஸ் பகுதியில் இருந்து கோல் அடித்த வீரர் ஆனார் பிரான்ஸின் போக்பா. 1982-ல் இத்தாலி Vs ஜெர்மனி போட்டியில் மார்கோ டர்டெல்லி இம்முறையில் கோல் அடித்திருந்தார்.

குரோஷியாவின் மண்ட்ஜுகிச்

9. உலக கோப்பை வரலாற்றிலேயே ஒரே போட்டியில் தனது அணிக்காக ஒரு கோலும் தனது அணிக்கு எதிராக ஒரு கோலும் அடித்த இரண்டாவது வீரர் ஆகியுள்ளார் குரோஷியாவின் மண்ட்ஜுகிச். 1978-ல் இத்தாலிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் எர்னி பிராண்ட்ஸ் இதே போல விளையாடியுள்ளார்.

10. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த ஆறு உலககோப்பை போட்டிகளில் (1998, 2006,2018) மூன்றில் இறுதிப்போட்டிக்கு வந்த ஒரே நாடு பிரான்ஸ். இதில் இரண்டு முறை (1998, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு