இன்று நள்ளிரவுடன் பிரசாரங்கள் ஓய்வு!
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுத் தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் 5 அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒரு கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிராக பதிவிடப்படும் தவறான பிரச்சாரங்கள் தொடர்பில் கண்காணிபடவுள்ளது. பொய்ப் பிரசாரங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 50 பேர் ஈடுபடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். v ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் வருகைதரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க மேலும் 08 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார். சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.
இதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.