பேருந்து கவிழ்ந்து விபத்து! 2 மாணவிகள் பலி, 39 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
பேருந்து கவிழ்ந்து விபத்து! 2 மாணவிகள் பலி, 39 பேர் படுகாயம்...

பதுளை - ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் 2 மாணவிகள் நேற்று (01) துன்ஹிந்த பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 39 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த வீதிக்கு அருகில் 3 வது மற்றும் 4 வது கிலோ மீற்றர் தூண்களுக்கு இடையில் இன்று காலை 8 மணிய அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, வீதியின் மறுபக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது பேருந்தில் மாணவர்கள் உள்ளிட்ட 41 பேர் இருந்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து காயமடைந்தவர்களை பேருந்தில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இதன்படி, காயமடைந்த 39 பேரை உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆபத்தான நிலையில் உள்ள 6 நோயாளர்கள் தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையவர்கள் சாதாரண பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 

பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கிடையில், அறுவை சிகிச்சைக்கு வருபவர்களை அவசரமாக அழைத்துச் செல்வதாகக் கூறிய மருத்துவர், மேலும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகக் கூறினார்.

இவர்கள் நேற்றுமுன்தினம் (31) பசறை நெல் முகாமைத்துவ நிறுவனத்தில் தங்கியிருந்து களப்பரிசோதனைக்காகச் சென்று கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத போதிலும், பிரேக் பழுதடைந்தமையினால் அதிவேகமாக பயணித்த பேருந்து வீதியில் மோதியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.