யாழ்ப்பாணத்தில் இராணுத்தினரிடம் உள்ள 522 ஏக்கர் நிலப்பரப்பு விரைவில் விடுவிப்பு.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்திடமுள்ள மேலும் 522 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளன என மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு சண்டே ரைம்ஸ் (15) ஆங்கில வார இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாண குடாநாட்டில் இன்னமும், 3 ஆயிரத்து 100 ஏக்கர் தனியார் காணிகள் மாத்திரம், இராணுவத்தினரின் வசம் உள்ளன. ஏற்கனவே, 3 ஆயிரத்து 800 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
"தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு, 880 மில்லியன் ரூபாவை, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சிடம் இராணுவம் கோரியிருந்தது.
முகாம்களை இடமாற்றம் செய்வதற்காக, கோரப்பட்ட நிதியில் ஒரு பகுதி புனர்வாழ்வு அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது. எஞ்சிய பகுதி நிதியும் விரைவில் கிடைத்து விடும்.
இதனால், கூடிய விரைவில், எஞ்சியுள்ள பெரும்பாலான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியும்.
வலிகாமம் வடக்கில், தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சில காணிகள் இராணுவத்துக்குத் தேவைப்படுகிறது. இதில் விட்டுக்கொடுப்பு இருக்காது" என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இன்னமும் 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலாளர் வேதநாயகன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.