முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
கேகாலை - கொஸ்ஸின்ன பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷான்த புலஸ்தி அவரது வீட்டிற்குள் கை கால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இனங்காணாத நபரொருவர் கொலை செய்யப்பட்டவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது கை கால்களைக் கட்டி வைத்து விட்டு அவரை தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர், அந்நபர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியையும் தாக்கி காயப்படுத்தியுள்ள நிலையில் வீட்டின் அலுமாரியில் இருந்த அனைத்து பொருட்களையும் கலைத்து விட்டு கார் ஒன்றையும் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் மனைவி சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்டதாகக் கூறப்படும் கார் பின்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.