SuperTopAds

போலி தேசியவாதிகளிடம் இருந்து எமக்கான அரசியலை மீட்பதே எமது தேர்தல் இலக்கு...

ஆசிரியர் - Editor I
போலி தேசியவாதிகளிடம் இருந்து எமக்கான அரசியலை மீட்பதே எமது தேர்தல் இலக்கு...

போலி தேசியவாதிகளிடம் இருந்து எமக்கான அரசியலை காப்பாற்றி எங்கள் தேசத்திற்கான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதால் தான் நான் அரசியலுக்கு வந்தேன் என அருணோதயம் மக்கள் முன்னணியின் சார்பில் தண்ணீர் குழாய் சின்னத்தில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில், முதன்மை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் பொன்னுத்துரை சுதன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

என்னுடைய அரசியல் பிரவேசம் 90ஆம் ஆண்டு கால பகுதிகளையே ஆரம்பித்து விட்டேன். ஆனால் வாக்கரசியல் என்பதற்குள் இந்த முறையே நேரடியாக வந்துள்ளேன்.

மண்ணுக்காக மக்களுக்காக பலர் மரணித்துள்ளார்கள். அவர்களின் கனவுகள் பொய்யாகின்றன. அவர்களின் மரணங்கள் அர்த்தமற்றதாகி போகின்றன. அவர்களின் தியாகங்கள் இன்று அனுமதி பத்திரங்களை பெறுவதற்கும் வரி விலக்குகளை பெறவும் சிலர் பயன்படுத்துகிறார்கள். அவற்றை பார்க்கும் போது மனமுடைந்து போகிறது.

அதனால் தான் நான் நேரடியாக அரசிலுக்கு வந்தேன். மக்களுக்கான அரசியல் என்பதனை ஒரு கனம் யோசித்து பார்த்தால் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்களுக்கான அரசியல் இல்லை. மக்கள் வாழ்வாதாரத்தில் வீழ்ச்சியடைந்து வறுமையை நோக்கி செல்கின்றனர்.

என்னுடைய அரசியல் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே நோக்கமாகும்.

அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்பது போல நாடும் கடனில் மூழ்கி போயுள்ளது. நாட்டில் வாழும் மக்களும் கடனில் மூழ்கியுள்ளனர்.

மக்களை கடன் சுமையில் இருந்து மீட்டு, அவர்களை வாழ்வாதார ரீதியில் உயர்த்தி , பொருளாதாரத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

அரசியல்வாதிகள் சுயநல அரசியலில் ஈடுபடுகின்றனர். எங்களுக்காக தங்களையே தந்தவர்கள் வாழ்த்த மண்ணில் இருந்து எம் மக்களுக்கான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் மக்களும் போலி தேசியவாதிகளிடம் இருந்து தப்ப வேண்டும். எமக்களுக்கான , எம் தேசத்திற்கான அரசியல் உண்டு அதனை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.