செரீனா விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடுவது ஏன் வரலாற்றுப்பூர்வமானது?

ஆசிரியர் - Editor II
செரீனா விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடுவது ஏன் வரலாற்றுப்பூர்வமானது?

டென்னிஸ் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ், கடந்த முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றபோது இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார். 2017 நடந்த அந்த ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் அவர் பெற்ற வெற்றி, அவரை பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்குக் கொண்டு சென்றது.

தனக்கு மகள் பிறந்து வெறும் 10 மாதங்களே ஆன நிலையில், மற்றொரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் செரீனா விளையாட உள்ளார். இந்த முறை விம்பிள்டனில். இன்று நடைபெறவுள்ள போட்டியில் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொள்ள உள்ள செரீனா, தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளார்.

பிரசவத்திற்குப் பிறகு நான்கு டென்னிஸ் தொடர்களில் செரீனா விளையாடி இருந்தாலும், இன்றைய போட்டியே பலரால் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் செரீனா வெற்றி பெற்றால், 8வது விம்பிள்டன் பட்டத்தை அவர் வெல்வார்.

''குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடுவது அருமையானது'' என்கிறார் செரீனா.

''எனது பிரசவம் மிகவும் கஷ்டமாக இருந்தது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. சிசேரியனுக்கு பிறகு, நுரையீரல் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக எனக்கு நான்கு அறுவை சிகிச்சை செய்தனர். அந்த நேரங்களில் என்னால் எழுந்து வாசலுக்குக் கூட நடந்து செல்லமுடியவில்லை.'' என்று கூறுகிறார் செரீனா.

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற செரீனா, ஆறு வாரங்கள் வீட்டில் படுக்கையில் இருந்தார்.

ஆனால், 36வது வயதில், அவரது பலமும், டென்னிஸ் மீது அவருக்கு இருக்கும் காதலும், பிரசவத்திற்குப் பிறகு உடனே அவர் டென்னிஸ் விளையாட வந்ததும் அவரது பயிற்சியாளரை கூட ஆச்சரியமடைய வைத்தது.

செரீனா வில்லியம்ஸ்

பிரசவகால விடுமுறைக்கு செரீனா சென்றபோது, உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தரவரிசைப்படி தற்போது 181வது இடத்திற்குச் சென்றார். இந்த வருட தொடக்கத்தில், அவர் மீண்டும் டென்னிஸ் விளையாட வந்தபோது, 451வது இடத்தில் இருந்தார். அவர் தொழில்முறையாக களத்தில் இல்லாததால், அவரது தரவரிசையும் வீழ்ந்தது.

செரீனா தரவரிசையில் சரிந்திருந்தாலும் இந்த அனைத்து தொடர்களில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக விலகுபவர்கள், அதிலிருந்து மீண்டவுடன் நேரடியாக தொடர்களில் பங்கேற்கமுடியாத சூழ்நிலை உருவாவதை தடுக்கும் தர வரிசை முறைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

செரினா விளையாட அனுமதிக்கப்பட்டாலும் 'சீடிங்' செய்யப்படவில்லை. இதனால் அவர் அனைத்து தொடர்களிலும் வலுவான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

செரீனா வில்லியம்ஸ்

சீடிங் எனும் சொற்பதம் டென்னிஸில் பிரபலம். டென்னிஸ் தொடரை நடத்துபவர்கள் பிரத்யேக சூத்திரத்தை பின்பற்றுகிறார்கள். எந்த வீரர் தொடரை வெல்லக்கூடும் என்பதை இந்தச் சூத்திரத்தை வைத்து தெரிந்துகொண்டு அதற்கேற்ப சீடிங் வரிசையை வெளியிடுவார்கள்.

டாப் சீடிங் வரிசையில் உள்ள டென்னிஸ் வீரர்கள் தொடரின் ஆரம்பத்திலேயே மோதாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இம்முறை கடைபிடிக்கப்படுகிறது. தற்போது கணினி மூலம் சீடிங் செய்யப்படுகிறது.

சீடிங் சூத்திரமானது டென்னிஸ் தரவரிசை, வீரரின் கடைசி 12 மாத கால பெர்ஃபார்மென்ஸ், 12 மாதங்களுக்கு முன்னதாக நடந்த சிறந்த தொடர்களில் அவ்வீரர்/வீராங்கனையின் பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. புல் தரை, களிமண் தரை என ஒவ்வொரு தொடருக்கும் சீடிங் வரிசை பிரத்யேகமாக உள்ளது.

செரீனா வில்லியம்ஸ்

செரீனா விவகாரத்தில் பெண்கள் டென்னிஸ் அமைப்பின் பிரசவகால விடுமுறை கொள்கைகள் பரந்த உரையாடலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த விடுமுறை கொள்கைகள் மூலமாக செரீனா மகப்பேறுக்காக பாதுகாப்பான தரவரிசை முறையில் இடம்பெற தகுதிபெற்றார். இதனால் அவர் இரண்டு கிராண்ட் ஸ்லாம் உட்பட எட்டு தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார். மேலும் ஏற்கனவே அவர் வென்றிருந்த தொடர்களில் வைல்டு கார்டு (தொடரில் திடீரென நேரடி தகுதி பெறும் முறை) விளையாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

தரவரிசை பாதுகாக்கப்பட்டிருந்தாலும் அது வீரரின் சீடிங்கில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. இதனால் அவ்வீரர் தொடரின் ஆரம்ப சுற்றுகளிலேயே கடும் சவால் தரும் டாப் வீரர்களை எதிர்கொள்ள நேரிடும்.

மகப்பேறுக்கு பிறகு உடனடியாக டென்னிஸ் விளையாடுவது என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சவாலானது. உலக டென்னிஸ் அமைப்பு இந்த கோணத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தவிர்ப்பதாக தெரிகிறது. இவ்வருடம் செரீனா விளையாடிய முதல் மூன்று தொடர்களில் ஆரம்ப சுற்றுகளிலேயே வெளியேறினார். ஆனால் விம்பிள்டன் வித்தியாசமானதாக அமைந்துள்ளது.

புல் தரையில் வீரரின் கடந்த கால செயல்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி செரீனா 25-வது சீடிங் பெற்றார். இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு அவர் தகுதிபெற்றது உலகம் முழுவதும் இந்த சீடிங் விதிகளை மாற்றுவது குறித்து ஆராய்வது மீதான விவாதங்களை கிளப்பியுள்ளது.

செரீனா வில்லியம்ஸ்

செரீனாவின் கதை மன உறுதியும் உத்வேகமும் நிறைந்தது. பிரசவத்துக்கு பிறகு விரைவில் டென்னிஸ் களத்துக்கு வந்து சாதித்தது தனிச் சிறப்பை உடையது. தற்போது சக டென்னிஸ் வீரர்களும் செரினாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடப்பு நம்பர் 1 வீராங்கனை சைமன் ஹலீப் மற்றும் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மரியா ஷரபோவாவும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெண்கள் டென்னிஸ் தொடரில் டாப் 32 வீரர்கள் நேரடியாக தகுதிபெறும் சுற்றில் செரீனாவையும் சேர்க்கச்சொல்லி அதிகாரிகளிடம் முன்னாள் விம்பிள்டன் ஜாம்பவான் ஜான் மெக்கென்ரோ வலியுறுத்தியுள்ளார். குழந்தை பெற்றதற்காக யாரும் தண்டிக்கப்பட கூடாது என ட்வீட் செய்திருக்கிறார் இவான்கா டிரம்ப் .

ஆக தற்போதைய தரவரிசை மற்றும் சீடிங் முறை மாற்றப்படுமா? நிச்சயம் பெண்கள் டென்னிஸ் அமைப்புக்கு அழுத்தம் அதிகரித்திருக்கிறது. காயம் காரணமாக விலகுவது மற்றும் குழந்தை பெற்றெடுப்பதற்காக விலகுவது போன்றவற்றுக்கு தனி தனி விதிகள் வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள்.

புதிய பெண்கள் தர வரிசை அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும். எப்படி இருந்தாலும் செரீனாவின் கதை பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஒரு உத்வேகம் அளிக்கக்கூடிய கதை மேலும் இந்த கதையில் வரும் செரீனாவை போலவே 'எப்போதும் போராடுங்கள், ஒருபோதும் விலகாதீர்கள்'.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு