குளிரான கடலில் 2 மாதங்களாக உயிருக்கு போராடியவர் மீட்பு: படகில் சடலமாக கிடந்த சகோதரர்கள்!
கடலில் தத்தளித்த ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவர் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு ஆசியாவின் குளிர்ந்த கடல் பகுதியான ஓகோட்ஸ்க்(okhotsk) கடல் பகுதியில் கிட்டத்தட்ட 2 மாதங்களாக உயிருக்கு போராடிய படி தத்தளித்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருடன் படகில் இருந்த சகோதரும், உறவினர் மகனும் படகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்ய ஊடகம் வழங்கிய தகவலின் அடிப்படையில், உயிருடன் மீட்கப்பட்ட நபர் 46 வயதான மிகைல் பிச்சுகின்(Mikhail Pichugin) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீட்கப்பட்ட போது வெறும் 50 கிலோ இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதத்தின் முற்பகுதியில் படகில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் 49 வயதான சகோதரர் மற்றும் 15 வயது உறவினர் மகனுடன், மிகைல் பிச்சுகின் சாந்தர் தீவுகளுக்கு திமிங்கலம் பார்ப்பதற்காக பயணித்துள்ளனர்.
அப்போது அவர்கள் காணாமல் போனதை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது, இருப்பினும் அவர்களை நீண்ட முயற்சிக்கு பிறகும் கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து தேடுதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அவர்களின் படகு எஞ்சின் பழுதடைந்து கடலில் தத்தளித்த போது வெறும் 20 லிட்டர் தண்ணீர் மற்றும் சிறிய அளவிலான உணவுடன் உயிர் தப்பி பிழைத்து வந்துள்ளனர் என்று ரஷ்ய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
மீட்பு தொடர்பாக நிர்வாகிகள் வெளியிட்ட வீடியோவில், பிச்சுகின் தன்னுடைய ஆடையை காட்டி மீன்பிடி குழுவை “இங்கு வாருங்கள்”என்று அழைத்துள்ளார்.
ரேடாரில் தோன்றிய சிறிய புள்ளியை அவர்கள் முதலில் கடல் குப்பை என்று கருதியுள்ளனர், ஆனால் தன்னிடம் எந்த சக்தியும் இல்லை என்று அவர் கத்தியதை தொடர்ந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.
படகில் இருந்த இருவரும் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் மரணம் குறித்த பாதுகாப்பு விதிமீறல்கள் விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.