SuperTopAds

தேசிய பட்டியல் ஆசையில் தமிழரசு கட்சி தவறான தீர்மானத்தை எடுக்கிறது - சுரேஸ் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
தேசிய பட்டியல் ஆசையில் தமிழரசு கட்சி தவறான தீர்மானத்தை எடுக்கிறது - சுரேஸ் குற்றச்சாட்டு..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவ இழப்பினை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது. 

 எவ்வாறாயினும், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் இணங்கியதன் பிரகாரம் இணைந்து செயற்படுவதற்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் கால அவகாசம் வழங்குகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

 நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய கூட்டமொன்று நேற்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றிருந்தது. 

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆசனப் பங்கீடுகள் யாழ்ப்பாணம், வன்னி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை மையப்படுத்தி பூர்த்தியாகியுள்ளது. எனினும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமான பங்கீடு திங்கட்கிழமை இரவு இறுதியாகவுள்ளது. 

இந்நிலையில் இக்கூட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு அக்கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பொதுக்கட்டமைப்பானது தொடர்ந்தும் பணியாற்றும் என்பதை நாம் இரு தரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் இந்தப் பாராளுமன்ற தேர்தலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகளை விரைவில் அறிவிப்போம். 

தற்போதைய நிலையில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.இதேவேளை, நாங்கள் பிரிந்து நிற்பதால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பிரதிநிதித்துவங்களை இழந்துவிடும் நிலை இருக்கிறது.கடந்த முறை அம்பாறையில் பிரதிநிதித்துவத்தினை இழந்தோம். 

இதற்கு முன்னதாக திருகோணமலை மற்றும் அம்பாறையில் ஒவ்வொரு தடவை பிரதிநிதித்துவங்களை இழந்துள்ளோம். ஆகவே, தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தினை உறுதி செய்வதில் நாம் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயராகவே உள்ளோம். 

அதற்காக நாம் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கொண்ட குழுவினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.

இதன்போது திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலும், அம்பாறையில் எமது சின்னத்திலும் போட்டியிடுவதற்கு இணக்கம் கண்டிருந்தோம். ஆனால் தற்போது அந்தக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் ஐந்து மாவட்டங்களில் தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

அது கட்சியின் உத்தியோகபூர்வமான முடிவா இல்லை அவரது தனிப்பட்ட முடிவா என்பது எமக்குத் தெரியாது. எனினும் தமிழ் மக்களின் நன்மை கருதி ஏற்கனவே இணக்கம் காணப்பட்டதற்கு அமைவாக, நாம் தமிழ் அரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தயராகவே உள்ளோம்.

எனவே நாளை திங்கட்கிழமை ஏழாம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வமான பதிலை அறிவிக்குமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். 

இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தற்போதைய அறிவிப்பின் பிரகாரம் அக்கட்சி செயற்படுவதாக இருந்தால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிரதிநிதித்துவ இழப்பிற்கு அக்கட்சியே காரணமாக அமையும்.

தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தினையோ அல்லது இரண்டு ஆசனத்தினையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. அதற்காக இரண்டு பிரதிநிதித்துவங்களை இழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொரு விடயமாகும். 

ஏனென்றால், அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக சேனாதிராஜா அங்கு சென்று போட்டியிட்டிருந்தார். ஆகவே, வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் பற்றிய புரிதல் சேனாதிராஜாவுக்கு உள்ளது. 

அதுகுறித்த புரிதல் சுமந்திரனுக்கு இருக்குமா, இல்லையா என்பது எனக்கு தெரியாது என்றார்.