யாழ்ப்பாணம் - நாவலர் மண்டபத்தில் வாக்குச் சாவடி அமைக்கவேண்டாம்! தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - நாவலர் மண்டபத்தில் வாக்குச் சாவடி அமைக்கவேண்டாம்! தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்..

ஆறுமுகநாவலர் கலாசார மண்டபத்தை வாக்குச்சாவடியாக பயன்படுத்துவது அதன் புனிதத்தன்மையையும் நடைமுறைகளையும் பாதிக்கக்கூடும் என்பதால் அம்மண்டபத்தை வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் மற்றும் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 இதுகுறித்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் சின்னத்துரை தனபாலா மற்றும் செயலாளர் கலாநிதி கி.பிரதாபன் ஆகியோரால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

இலங்கையின் தேசிய வீரர்களுள் ஒருவராகப் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கலாசார மண்டபம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் கோரிக்கைக்கு அமைவாக 1972ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1985 இல் கட்டட நிர்மாண வேலைகள் பூர்த்தியான போதிலும், நீண்டகாலமாக யாழ்ப்பாண மாநகரசபையின் பராமரிப்பில் இருந்துவந்தது. 

 ஆறுமுகநாவலர் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானை என்றும் நினைவில் கொள்ளும் வகையிலும் ஓர் ஆன்மிக மையமாக அவர்தம் கொள்கைகளைப் பேணும் நினைவாலயமாக விளங்குவதன் பொருட்டுமாகும். நாவலர் கலாசார மண்டபம் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் சைவசமய ஆசார அனுட்டானங்களைப் பேணும் ஆன்மிக நிலையமே இக்கலாசார மண்டபமாகும். 

பொது செயற்பாடுகளுக்கும் பொது சேவைகளுக்கும் இந்த மண்டபம் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அதன் புனிதத்தன்மையை பேண வேண்டும் என்ற விடயம் கருத்திற்கொள்ளப்படவில்லை. 

நாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், அங்கு புனிதத்தன்மை பேணப்படவேண்டியதன் அவசியம், அம்மண்டபத்தை ஆன்மிக நிலையமாகப் போற்றவேண்டியதன் தேவைப்பாடு மற்றும் அங்கு ஆசாரங்கள் பின்பற்றப்படவேண்டியதன் முக்கியத்துவம் உள்ளிட்ட இன்னோரன்ன காரணங்களால் கடந்த காலக் கோரிக்கைகளுக்கு அமைவாக 2022ஆம் ஆண்டு முதல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக இந்த மண்டபத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

இவ்வாறானதொரு பின்னணியில் இம்மண்டபத்தையும் வாக்குச்சாவடியாகப் பயன்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள நிலையில், அது அதன் புனிதத்தன்மையையும், நடைமுறைகளையும் பாதிக்கக்கூடும் என்பதால், தயவுசெய்து இந்த மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு