SuperTopAds

மிக பலவீனமான ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்! எதிக்கட்சி தலைவர் சஜித் கூறுகிறார்...

ஆசிரியர் - Editor I
மிக பலவீனமான ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்! எதிக்கட்சி தலைவர் சஜித் கூறுகிறார்...

நாட்டின் பொருளாதாரம் சுருங்கியுள்ளதன் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் இல்லாமல் போயுள்ளன. மாறாக மக்களின் சுமைகள் குறைக்கப்படவில்லை. 

சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக, பலவீனமான ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற பௌத்த பிக்குகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லாவிட்டால் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் சில தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். 

பொருளாதாரம் மங்கியுள்ளதன் காரணமாகவே வரிகளும் நீக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கை முறைமையும் சுருங்கியுள்ளது. 

நாட்டின் பொருளாதார வேகமும் வீழ்ச்சியடைந்துள்ளது.மக்களால் அவர்களது தேவைக்கு ஏற்ப கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. 

உற்பத்தியும் செய்யப்படுவதில்லை. மக்களுக்கு மீதப்படுத்துவதற்கு எதுவும் இல்லை. பொருளாதாரத்தைச் சுருக்கி வறுமையை அதிகரித்து மக்கள் மீது சுமைகளைச் சுமத்தி எவருக்கும் வரிசைகளை இல்லாமல் செய்ய முடியும்.மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையுடனேயே வரிசை யுகத்தை நிறைவு செய்ய வேண்டும். 

சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவற்றுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காகப் பலவீனமான ஒப்பந்தங்களை எம்மால் அனுமதிக்க முடியாது.

சமூகத்தில் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் மக்களின் கைகளில் பணம் இல்லை. உற்பத்தி, விநியோகம், பாவனை, ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தையும் நிறுத்திவிட்டு ஸ்திரமடைந்து விட்டதாகக் கூறுகின்றனர். 

எம்முடன் தொழிநுட்பக்குழு இருக்கிறது. அந்த குழுவுடன் இணைந்து நாட்டுக்கு நன்மை தரக்கூடிய மக்களின் சுமைகளைக் குறைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகவுள்ளோம். 

புதிய ஒப்பந்தத்துக்குச் சென்று மக்களின் சுமைகளைக் குறைப்போம் என்றார்.