உப்பில் அயடீன் அளவு குறைவு! யாழ்.கோண்டாவிலில் வர்த்தகருக்கும் உப்புக் கம்பனி முதலாளிக்கும் தண்டம் விதித்த நீதிமன்றம்..
யாழ்.கோண்டாவில் பகுதியில் அயடின் குறைவாக கலக்கப்பட்ட உப்பு விற்பனை செய்த வர்த்தகர்கள் மற்றும் உப்பு கம்பனி உரிமையாளர் ஆகியோருக்கு தண்டம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன் தலைமையிலான குழுவினரால் 12.03.2024 அன்று கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட உப்பில் சந்தேகமடைந்து உப்பின் மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்புவதற்கு தீர்மானித்தார்.
அன்றையதினமே மாதிரியை பெற்றுகொண்ட பொது சுகாதார பரிசோதகர் அதனை அனுராதபுரம் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பகுப்பாய்வு அறிக்கைக்காக அனுப்பி இருந்தார்.
பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் நியம அளவினைவிட குறைந்த நிலையில் அயடீனின் அளவு குறித்த உப்பில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடை உரிமையாளர், விநியோகஸ்தர், புத்தளத்தினை சேர்ந்த உப்பு கம்பனி உரிமையாளர் ஆகியோரிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கினை விசாரித்த நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா மூவரிற்கும் தலா 10,000/= வீதம் 30,000/= தண்டம் விதித்தார். அத்துடன் உப்பு தொழிற்சாலையை பரிசோதிப்பதற்கு ஏதுவாக,
பரிசோதனை அறிக்கை, நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் உப்பு கம்பனி அமைந்துள்ள பிரதேச சுகாதார திணைக்களத்திற்கு அறிவித்தல் வழங்கி,
அது தொடர்பான அறிக்கையை 01.10.2024ம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கி, வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.