SuperTopAds

யாழ்.புன்னாலைக்கட்டுவன் இராஜ இராஜேஸ்வரி சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா VIDEO

ஆசிரியர் - Admin
யாழ்.புன்னாலைக்கட்டுவன் இராஜ இராஜேஸ்வரி சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா VIDEO

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்துக்கெனப் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சித்திரத்தேரின் வெள்ளோட்ட விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(08) சிறப்பாக இடம்பெற்றது.

முற்பகல் மூலமூர்த்தியில் எழுந்தருளியுள்ள அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பூசைகள் நடைபெற்றது.

சித்திரத் தேரடியில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து முற்பகல்-11.30 மணியளவில் சித்திரத்தேர் வெள்ளோட்டத்துக்கான சிறப்புக் கிரியைகள் ஆரம்பமானது.

சித்திரத்தேரின் கலசத்திற்குப் பூசைகள் இடம்பெற்று அதன் பின்னர் கலசம் ஆலய உள்வீதியூடாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டுச் சுபநேரத்தில் சித்திரத்தேரின் மீது வைக்கப்பட்டது.

சிற்ப ஆசாரிமாருக்கான கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பிற்பகல் -12.30 மணியளவில் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் ஆரம்பமானது. புதிய சித்தித் தேரினை ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுத்தனர்.

சித்திரத்தேர் ஆலய முன்றலை வந்தடைந்ததைத் தொடர்ந்து தேர் சிற்பாசாரியார் குழுவினருக்கான விசேட கெளரவிப்பு இடம்பெற்றது.

சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாவை முன்னிட்டு விசேட நாதஸ்வர மேளக் கச்சேரி களைகட்டியதுடன் வெள்ளோட்ட விழாவில் கிராமத்தவர்கள் மாத்திரமன்றி அயற்கிராமங்களையும் சேர்ந்த பல எண்ணிக்கையான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.

சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாவுக்கான கிரியைகளை மூத்த குருமணி பிரம்மஸ்ரீ ந. சபாரத்தினக் குருக்களின் அருள் ஆசியுடன் ஆலயப் பிரதமகுரு பிரம்மஸ்ரீ சபா. சந்தானக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பாக ஆற்றினர்.

பல்லாண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் கடந்த கால யுத்தத்தால் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் புன்னாலைக்கட்டுவன் வாழ் புலம்பெயர்ந்த அடியவர்களதும்,கிராம மக்களினதும் அயராத முயற்சியினால் படிப்படியாக வளர்ச்சி நிலைகளைச் சந்தித்து வருகின்றது.

இவ்வாலயத்துக்கென இதுவரை காலமும் சித்திரத்தேர் இல்லாமலிருந்த நிலையில் புதிய சித்திரத்தேரை நிர்மாணிப்பதற்கான முழுநிதிப் பங்களிப்பையும் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வாழ்ந்து வரும் கதிரேசு கனகசபாபதி குடும்பத்தினர் மனமுவந்து வழங்கியுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த சரவணமுத்து ஜெயமோகன் ஆசாரியார் தலைமையிலான குழுவினர் சித்திரத் தேர் நிர்மாணப் பணித் திருப்பணி வேலைகளைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளனர்.

இதேவேளை, ஆலயப் பிரதமகுரு பிரம்மஸ்ரீ சபா. சந்தானக் குருக்கள் இவ்வாலய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழாவை முன்னிட்டு எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட ஆசிச் செய்தி காணொளி வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.