ஊடகரின் வீட்டின் மீதான தாக்குதல், இராணுவத்தின் மறை கரங்கள் உள்ளன - சி.சிறீதரன்..

ஆசிரியர் - Editor I
ஊடகரின் வீட்டின் மீதான தாக்குதல், இராணுவத்தின் மறை கரங்கள் உள்ளன - சி.சிறீதரன்..

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென தெரிவித்தார்.

அச்சுவேலியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் இல்லத்தை நேற்று  பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலத்திற்கு பின்னர் ஊடகவியலாளரை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் கடந்த 13 ம் திகதி நடைபெற்று இன்றுடன் மூன்று நாள்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸார் ஆகியோர் தேடுகிறோம் பிடிக்கிறோம் என்கிறார்கள். 

எதுவும் நடப்பதாக இல்லை. இதே ஜனாதிபதியை பற்றியோ அரச உயர் அதிகாரிகள் பற்றியோ யாராவது பதிவு போட்டால் ஒரு சில மணிநேரங்களில் கைது செய்யப்படுவார்.

யாழ் மாவட்டத்தில் மூலைக்கு மூலை இராணுவம், கடற்படை, விமானப்படை பொலிஸார் குவிக்கப்பட்டு இருக்கும்போது எவ்வாறு இவர்களுக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிள்களில் துணிகரமாக வாள்கள் பொல்லுகளுடன் வரமுடிகிறது.

வீட்டுக்கு வெளியே நின்ற பேருந்து முச்சக்கரவண்டியை தாண்டி ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை இனங்கண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த விடயத்தை திசைதிருப்புவதற்காக திருநங்கைகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி பலாலி வசாவிளான் பகுதியில் காணி துண்டு விடுவிப்புக்காக வந்தபோது, 

காணி விடுவிக்கப்படவில்லை மக்கள் கூடியநிலையில் அது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற த.பிரதீபன் இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அரசாங்கம் திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடக்குறைகளை விரிவுபடுத்தி பிரயோகிப்பதையே இதன்மூலம் பார்க்கமுடிகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு