அரசாங்க வேலைத்திட்டங்களுக்கு தமிழில் பெயரிடுங்கள்! அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசணை..
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் எமது பிரதேச மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மக்களுக்கு புரிந்து கொள்ளும் பட்சத்திலேயே, குறித்த திட்டங்களுடன் எமது மக்கள் ஆத்மார்த்தமான ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட நிதி ஒதுக்கீட்டில் முன்மொழியப்பட்டு இறுதி செய்யப்பட்டு வினைத்திறனாக நடைமுறைபடுத்துவதற்கான அனுமதி வழங்கும் கலந்துரையாடல் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலகத்தில் அரச அதிபரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை மக்களுக்கானதாக வினைத்திறனுடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார்.
இதேநேரம் குறித்த செயற்பாடுகள் திணிப்போ அல்லது அரசியல் நோக்குடையதோ இருப்பதான என்று எண்ணவேண்டாம். நான் சுயநலத்துக்காக அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்துதான் பார்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதேநேரம் கடந்தகாலத்தில் நாட்டின் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றின் தாக்கம் ஆகியவற்றால் கடந்த 3 வருடங்களாக இந்த நிதி கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது அது 320 மில்லியனாக கிடைத்துள்ளது.அந்தவகையில் அந்த நிதிக்கான முன்மொழிவுகள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து முன்னுரிமை அடிப்படையில் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அரச அதிகாரிகளது முன்னிலையில் தெரிவுசெய்யப்பட்டு தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மக்களுக்கு உச்சபட்சமான பலனை கிடைக்க செய்வதே எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேநேரம் மாவட்ட செயலர், யாழ் மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், சமுர்த்தி உள்ளிட்ட தரப்பினரது ஒத்துழைப்படன்
ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவென கிராமத்துக்கான விழிப்புக்குழு ஒன்றையும் கட்டமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.