பொதுச் சுகாதார பரிசோதகர்களை உணவு உற்பத்தி நிலையத்திற்குள் வைத்துப் பூட்டியவர்கள் கைது! யாழில் சம்பவம்..
யாழ்ப்பாணத்தில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த குற்றச்சாட்டில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர்.
அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும் , டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதன் போது, பணியாளர்களாக அங்கு கடமையாற்றும் ஆணொருவரும் , பெண்ணொருவரும் சுகாதார பரிசோதகர்களுடன் தர்க்கப்பட்டு , அவர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டி விட்டு , அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதனை அடுத்து , சுகாதார பரிசோதகர்கள் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்ததை , அடுத்து, வைத்திய அதிகாரி தெல்லிப்பழை பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து ,
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சுகாதார பரிசோதகர்களை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்களிடம் இருந்து முறைப்பாட்டை பெற்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து ,
சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்து விட்டு தப்பி சென்ற ஆண் மற்றும் பெண் பணியாளர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.