கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டணையை இரத்து செய்த யாழ்.மேல் நீதிமன்றம்..
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளிகளின் சிறைத்தண்டனையை யாழ்.மேல் நீதிமன்று இரத்து செய்துள்ளது.
இலங்கை கடற்பரப்பினுள் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் படகுகளை அத்துமீறி செலுத்திய குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகளுக்கு 06 மாத சிறைத்தண்டனையை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று வழங்கியிருந்தது.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மூன்று படகோட்டிகளும் , தமது சட்டத்தரணி ஊடாக யாழ்.மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.
மேன்முறையீடு மீதான வழக்கு விசாரணையில் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனையை புறமொதுக்கி மூன்று படகோட்டிகளையும் விடுதலை செய்து மன்று கட்டளையிட்டது.
அதனை அடுத்து மூன்று படகோட்டிகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , மூவரும் விடுவிக்கப்படவுள்ளனர்.