SuperTopAds

விருந்துக்கு வந்தவர்களையே வன்முறை கும்பல் என கூறி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்! ஊர்காவற்றுறை சம்பவம் குறித்து மற்றொரு தரப்பு முறைப்பாடு...

ஆசிரியர் - Editor I
விருந்துக்கு வந்தவர்களையே வன்முறை கும்பல் என கூறி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்! ஊர்காவற்றுறை சம்பவம் குறித்து மற்றொரு தரப்பு முறைப்பாடு...

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர்கள் மீது ஊரில் உள்ள சிலர் மதுபோதையில் தாக்குதல் நடாத்தி , அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி பொலிசாரிடம் கையளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை , தாக்குதலாளிகளுக்கு ஆதரவாக பொலிஸாரும் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டுகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , யாழ்ப்பாண நகர் பகுதியை சேர்ந்த தனது நண்பனான இளைஞனை தனது வீட்டுக்கு விருந்துக்கு கடந்த 04ஆம் திகதி அழைத்துள்ளார். 

அதனை அடுத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் , தனது நண்பர்களாக மேலும் மூவருடன் முச்சக்கர வண்டியில் ஊர்காவற்துறைக்கு சென்றுள்ளனர். தம்மை விருந்துக்கு அழைத்த இளைஞனின் வீட்டுக்கு முன்னால் முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு , நால்வரும் வீட்டினுள் சென்று அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த வேளை ஊரை சேர்ந்த சிலர் போதையில் , 

வெளியூரை சேர்ந்தவர்கள் யாரின் அனுமதி பெற்று ஊருக்குள் வந்தார்கள் என முரண்பட்டு . அவர்களின் முச்சக்கர வண்டி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அவ்வேளை , இளைஞனை விருந்துக்கு அழைத்த இளைஞன் தாக்குதலாளிகளை தடுக்க முற்பட்ட வேளை இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டு அவர்களின் வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு , 

யாழில் இருந்து சென்ற இளைஞர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு , அவர்களை பிடித்து ,ஊர்காவற்துறை பொலிஸாரிடம் , தம்மை தாக்க யாழில் இருந்து வந்ததாக கூறி கையளித்துள்ளனர். பொலிஸார் அவர்களை செய்த வேளை யாழில் இருந்து சென்ற இளைஞர்கள் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து இருந்தமையால், 

அவர்களை சட்ட வைத்திய அதிகாரி முன்பாக முன்னிலைப்படுத்தி சிகிச்சை வழங்கியதுடன் , வைத்திய அறிக்கையையும் பெற்று இருந்தனர். பின்னர் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழை சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் 04ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

அவ்வேளை , ஊரில் தமது வீட்டினை தாக்கி , தமது வீட்டிற்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி ,அவர்களின் முச்சக்கர வண்டியை சேதமாக்கியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் , ஊரை சேர்ந்த ஒருவர் , 

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர்கள் தங்களின் வீட்டிற்குள் புகுந்து தம்மை தாக்க வந்ததாக பரஸ்பர முறைப்பாடு வழங்கியுள்ளார். முதல் முறைப்பாட்டிற்கு விசாரணைகளை முன்னெடுக்காத பொலிஸார் , இரண்டாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, 

முதல் நாள் பொலிஸ் பிணையில் விடுத்த இளைஞர்களை பொலிஸ் நிலையம் அழைத்து மீள கைது செய்து நேற்றைய தினம் 06ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர். அதன் போது கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்ததை அடுத்து மன்று அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது. 

அதேவேளை முதலாவது முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை மண்டைதீவு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்று தமக்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் ஆதரவு உள்ளதாக பெயர் குறிப்பிட்டு கூறிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள , பொலிஸ் உத்தியோகஸ்தரே ஊர்காவற்துறை சம்பவத்திலும் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.