SuperTopAds

வடமாகாணத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் - சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் - சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்..

வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார். 

கடந்த 21ஆம் திகதி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக திலக் சி.ஏ.தனபால, பதவியேற்று இருந்தார். அந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

வடக்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியே. வடக்கில் ஏற்கனவே பணியாற்றியவன் என்ற அடிப்படையில் இங்குள்ள பிரச்சினைகள் பலவற்றை அனுபவ ரீதியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நான் அறிவேன். 

ஆதலால், வடமாகாண மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தச் சிரமமும் இருக்கப்போவதில்லை. வடக்கு மாகாணத்தில் வீதிப்போக்குவரத்தில் உள்ள குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு மேம்பட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

போதைப்பொருள் பிரச்சினைகள், சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இதர குற்றச்செயல்கள் விரைவில் கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு முடியுமான அத்தனை நடவடிக்கைகளையும் விரைவில் மேற்கொள்வேன் - என்றார்.