அம்பாறை மாவட்ட கள எவிஜயம் தொடர்பான உயர்மட்ட கூட்டம்
அம்பாறை மாவட்ட கள விஜயம் தொடர்பான உயர்மட்ட கூட்டம்
அம்பாறை மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டு பல்வேறு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி மற்றும் குறைநிறைகள் ஆராயப்பட்ட பின்னர் கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை (26) குறித்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி மஹிபால தலைமையில் நடைபெற்றது.
இதன் போது சம்மாந்துறை வைத்தியசாலை நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளின் அடிப்படைக்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் மேற்குறித்த வைத்தியசாலைகளின் வேலைத்திட்டங்களை எதிர்வரும் மே மாதங்களில் நிறைவு செய்வதற்கு நடைவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முடிவு எட்டப்பட்டுள்ளதுடன் ஏனைய குறைநிறைகளை முதல் கட்டமாக பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் குறித்த உயர் மட்டக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சீன நாட்டு நிறுவன திட்டமிடல் அதிகாரிகள் பிராந்திய சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அயராத முயற்சியின் மூலம் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை பொத்துவில் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையாக கருதப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பின்னர் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிர்மாணப்பணிகள் தாமதமடைந்ததை தொடர்ந்து, அவற்றை நிறைவு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்த நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை நிர்மாணப் பகுதிக்கும், சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளுக்கும் கள விஜயம் மேற்கொள்ள உள்ளதோடு, விரைவான தீர்வுகள் பற்றி குறித்த குழுவினருடன் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.