யாழ்.வட்டுக்கோட்டை இளைஞனின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது!!
யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றைய தினம் (17) யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (11) தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, தமது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் பொன்னாலை பாலத்தினருகே உள்ள கடற்படை முகாமுக்கு
அருகாமையில் வன்முறை கும்பலொன்று வாகனத்தில் கடத்திச் சென்றது. அதன் பின்னர், கணவர் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
அத்தோடு, கடத்திச் சென்ற மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கிவிட்டு அந்த வன்முறை கும்பல் தப்பிச் சென்றிருந்தது. அந்த கும்பல் தம்மை வழிமறித்து, தாக்கி கடத்த முற்பட்ட வேளையில்,
தாம் உதவி கோரி கடற்படை முகாமுக்கு சென்றபோது, அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டியதாகவும், தனது கணவரின் படுகொலைக்கு கடற்படையினரும் காரணம் என படுகொலை செய்யப்பட்ட கணவரின் மனைவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
காணொளியில், கணவரும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்து கணவன், மனைவி இருவரையும் கடத்திச் செல்வதும் பதிவாகியுள்ளது.
கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில், கடத்தலுக்கு கடற்படையினர் உதவியதாக தெரிவித்த மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலு சேர்த்துள்ளது.
கடந்த நாட்களில் இந்த கொலையுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மேலும் ஒருவர் கைதாகியுள்ளார்.