யாழ்.வலி,வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீடுகளில் திருடர்கள் கைவரிசை!
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர்.
கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67 ஏக்கர் காணி அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்குள் உடனே சென்று மீள் குடியேற முடியாத நிலையில் காணி உரிமையாளர்கள் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதனால் , விடுவிக்கப்பட்ட தமது காணிகள், வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு திரும்புகின்றனர்.
விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் காணி வீடுகளில் யாரும் இல்லாத நிலைமையை பயன்படுத்தி , திருடர்கள் அப்பகுதிகளுக்குள் புகுந்து , பயன்தரு மரங்களை வெட்டுவதுடன் , வீட்டில் காணப்படும் ஜன்னல் , கதவுகளின் நிலைகள் , இரும்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றை களவாடி செல்கின்றனர்.
கதவுகள் ஜன்னல் நிலைகளை களவாடும் போது , வீடுகளையும் சேதமாக்குகின்றனர். திருடர்களிடம் இருந்து தமது வீடுகளையும் , காணிகளுக்குள் உள்ள பொருட்களையும் ஒரு சில வாரங்களுக்கு பாதுகாத்து தருமாறு இராணுவத்தினர் மற்றும் பொலிசாரிடம் தாம் கோரிய போதிலும்,
அவர்கள் திருடர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பின்னடிப்பதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.