மருதனார்மடம் சந்தையில் திருடிய தேங்காய்களை திருநெல்வேலி சந்தையில் விற்றுக் கொண்டிருந்தவர் கைது!
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் தேங்காய் மூடைகளை திருடி , திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் செய்த நபர் பாதிக்கப்பட்ட வியாபாரியால் பிடிக்கப்பட்டு, சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மருதனார்மடம் சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபடும் நபர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு ஐந்து மூடைகளில் தேங்காயை கட்டி , சந்தையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
மறுநாளான நேற்றைய தினம் சனிக்கிழமை வியாபாரம் செய்யும் நோக்குடன் சந்தைக்கு வந்த போது, முதல் நாள் சந்தையில் வைத்த தேங்காய் மூடைகளை காணவில்லை.
அதனை அடுத்து , அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் , யாழில் உள்ள சந்தைகளுக்கு சென்று , தேங்காய் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களை நோட்டம் விட்டுள்ளார்.
அதன் போது திருநெல்வேலி சந்தையில் தனது திருடப்பட்ட தேங்காய் மூடைகளை வைத்து , தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை அங்கிருந்தவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்து , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸார் அந்நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.