பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர்களுக்கு விஷம் கொடுத்த விவகாரம்! 3 சந்தேகநபர்கள் கைது..
கொழும்பு - ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களுக்கு பார்வையாளர் ஒருவர் ‘விஷம்’ கொடுத்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொட்டாஞ்சேனை, ஒருகொடவத்தை மற்றும் கொழும்பு 13 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பிரபல குற்றவாளி ஒருவரின் உத்தரவுக்கமைய இந்த குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஜனவரி 24ஆம் திகதி கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் உள்ள சிறைக்குள் எடுத்துச் செல்லப்பட்ட பால் பக்கற்றுகளில் சயனைட் விஷம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர், பால் பக்கற்றுகளை கொள்வனவு செய்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பால் பக்கற்றை வழங்கியதையடுத்து, அவற்றை குடித்த இருவரும் மயங்கிவிட்டனர். ஆபத்தான நிலையில்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற வேளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.