SuperTopAds

வடமாகாணத்தை அடிப்படையாக கொண்டு மீன்பிடி முதலீட்டு வலயம் - சீன நிறுவனத்திற்கு...!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தை அடிப்படையாக கொண்டு மீன்பிடி முதலீட்டு வலயம் - சீன நிறுவனத்திற்கு...!

வடக்கை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பது தொடர்பில் வியாழக்கிழமை (25) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

அத்தோடு உள்நாட்டு டின்மீன் உற்பத்தியாளர்களின் மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு டின் மீன் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கும் அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மீனவர் நலன்புரி சேவை திட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை வெல்லமங்கரை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். ஆழ்கடலில் மீனவர்கள் சுகவீனமடையும் போது, 

அவர்களுக்கான அவசர சுகாதார சேவைகளை வழங்குவது குறித்து இதன் போது அதிக அவதானம் செலுத்தப்படும். கடற்றொழில் அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ஐஸ் விலை அதிகரிப்பு தொடர்பிலும், எரிபொருளுக்கான மாற்று திட்டம் தொடர்பிலும், மண்ணெண்ணெய் எஞ்சின் கொண்ட படகுகளுக்கான மாற்று திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய டின் மீன் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக, டின்மீன் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு, மீன்பிடித் திணைக்களம் இணைந்து செயற்பட்டு வருகிறது. 

மேலும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சீனா உட்பட பல்வேறு நாடுகளிடமிருந்து புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

வியாழக்கிழமை (25) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் சீன நிறுவனமொன்றுடன் இது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் வடக்கில் மாத்திரமின்றி மீனவர்கள் வாழும் சகல மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். 

நாடுகளுக்கிடையிலான உறவுகளில் எவ்வித விரிசலும் ஏற்படாத வகையிலேயே இலங்கை - இந்திய மீனவர் பிரச்சனையை அணுகுகின்றோம்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரதான பிரச்சினை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். 

இவ்விடயத்தில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடற்படைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.