50 ஆண்டுகளுக்குப் பிறகு.... உலகக் கோப்பை பைனலில் ஒரு அதிசயம் அரங்கேறப் போகுது!
மாஸ்கோ: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் ஆகியவை வெளியேறியுள்ளதால், கடந்த 50 ஆண்டுகளில் பைனலில் விளையாடாத ஒரு அணி, இந்த உலகக் கோப்பை பைனலில் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இந்த உலகக் கோப்பையில் பல அதிர்ச்சிகள் நடந்துள்ளன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறியது. முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகியவை நாக் அவுட்டில் தோல்வியடைந்து வெளியேறின. இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பைகளில், 12 அணிகள் மட்டுமே பைனலில் மாறி மாறி விளையாடி வந்துள்ளன. கடந்த 2010ல் இந்த எலைட் பிரிவில் ஸ்பெயின் சேர்ந்தது. இதுவரை 8 அணிகள் மட்டுமே கோப்பையை வென்றுள்ளன.
உருகுவே, அர்ஜென்டினா, இத்தாலி, செகஸ்லோவாகியா, ஹங்கேரி, பிரேசில், ஜெர்மனி, ஸ்வீடன், இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய 12 அணிகள் மட்டுமே இதுவரை பைனலில் விளையாடியுள்ளன.
இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றிலேயே முன்னாள் சாம்பியன் இத்தாலி வெளியேறியது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ஸ்பெயினும் வெளியேறியது.
தற்போது நாக் அவுட்டில் உள்ள பெல்ஜியம், ரஷ்யா, ஜப்பான், மெக்சிகோ, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, குரேஷியா ஆகியவை இதுவரை பைனல் நுழைந்ததில்லை. முதல் முறையாக பைனல் நுழைவதற்கான வாய்ப்பு இந்த அணிகளுக்கு கிடைத்துள்ளது.
இங்கிலாந்து, ஸ்வீடன், உருகுவே ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில் பைனல் நுழைந்ததில்லை. அதனால், கடந்த 50 ஆண்டுகளில் பைனலில் விளையாடாத ஒரு அணி, இந்த முறை பைனலில் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அல்லது ஒரு புதிய அணி முதல் முறையாக பைனல் விளையாடும்.
மேலும் 2010 சாம்பியன் ஸ்பெயின், 2014 சாம்பியன் ஜெர்மனி வெளியேறியுள்ள நிலையில், இந்த உலகக் கோப்பையில் விளையாடும் மற்ற அணிகளின் வீரர்கள் எவரும் இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்த முறை எந்த அணி கோப்பையை வென்றாலும், அதன் வீரர்களுக்கு முதல் கோப்பையாக அது அமையும்