சுதந்திர தினத்திற்கு முன் மீதமுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் - ஜனாதிபதியிடம் கோரிக்கை...
சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்துக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு நோக்கிய விஜயத்தை இலக்கிருத்தி கடந்த வாரம் முதல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது.
மிக நீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும் எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னதாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்து கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன.
இவ்வாறு கையெழுத்துக்கள் இடப்பட்ட மகஜர், நேற்றைய தினம் சனிக்கிழமை (06) யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :ஜனாதிபதி அவர்களே, மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.
இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், இந்த அழகிய சிறிய தீவில் வாழும் இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒரு நியாயமான மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.
மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இனமுறுகல் மற்றும் முரண்பாடு காரணமாக பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்னும் துளிர்விடவில்லை.
தற்போதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை இந்த நாட்டில் இன முரண்பாடுகளும் அவநம்பிக்கையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். இந்த நாட்டில் நீண்டகாலமாக இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன, அரசியல் பிரச்சினைகளுக்கு நீதியான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதுடன்,
போரினாலும் மற்றும் இன்றும் போரின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகும். சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனித நேயமுள்ள சிவில் அமைப்புகளாக நாம் இதன் மூலம் மட்டுமே இலங்கைத் தீவில் உண்மையான, நிலையான, நியாயமான அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறோம்.
அந்த வகையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள இனப் பதற்றத்தை தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தீர்கள்.
ஆனால், தற்போது அவ்வேலைத்திட்டம் தேக்கமடைந்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வது நல்லிணக்க முயற்சியாக தமிழ் மக்களுக்கு தங்கள் மீது வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். வரலாறு முழுவதும், அரசியல் கைதிகள் அல்லது போர்க் கைதிகளின் விடுதலை அல்லது பரிமாற்றம் என்பது பிளவுபட்ட அல்லது போரில் இருக்கும் இரு தரப்பினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கும் செயலாக இருந்து வருகிறது.
நீக்கப்பட வேண்டியதும் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அவமானத்தைத் தருவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக நீண்டகாலமாக (15 முதல் 28 ஆண்டுகள் வரை) சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அதே சட்டத்தின் காரணமாக 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் (வழ.இல.HC/3861/2007) வழக்கை எதிர்கொண்டு '15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட
இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபா 25000 அபராதம்' என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி செ.சத்தியலீலா ஆகியோரையும்
எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் விடுவித்து அவர்களது உறவினர்களுடன் சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். நீண்ட கால சிறைவாசம் காரணமாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடைபிணங்களாக சிறையில் வாடுகின்றனர்.
மனிதாபிமான அடிப்படையிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டும் திருமதி சத்தியலீலா உட்பட எஞ்சிய 12 தமிழ் அரசியல் கைதிகளையும் அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றச்சாட்டுகளை விலக்குவது மூலமும் அல்லது தண்டனைகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமும் எந்தவித பாகுபாடும் இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு துன்பப்படும் எமது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.