யாழில் தொடரும் காணி மோசடிகள்! 5 நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனராம்...
யாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர்.
அதேவேளை மேலும் சில நொத்தாரிசுகள் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன,
இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் , நொத்தாரிசுமானவரை ஐந்து இலட்ச ரூபாய் சரீர பிணையில், யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக ஏற்கனவே நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.
அந்தத் தீர்ப்புக்கு மாறாக மோசடியாகத் தயாரிக்கப்பட்ட உறுதி ஊடாக அந்தக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளது என அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
அந்நிலையில் குறித்த காணி உறுதிப்பத்திரம் தொடர்பாக அந்த உறுதிப்பத்திரங்களை வரைந்த பிரசித்த நொத்தாரிசும், சட்டத்தரணியுமான ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்த உறுதியை வரைந்த பிரசித்த நெத்தாரிசு உண்மைக்குப் புறம்பாகத் தகவலை இட்டு மோசடியான முறையில் ஆவணம் ஒன்றைத் தயாரித்ததாகக் கூறி அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பொலிஸார் மன்றிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சட்டத்தரணிகள் மற்றும் பொலிசாரின் சமர்ப்பணங்களின் பின்னர் கட்டளைக்காக புதன்கிழமை (03) குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது, நீதிமன்றம் முன் பிணை கோரிய சட்டத்தரணிக்கு 5 லட்சம் ரூபா சொந்த சரீரப் பிணை என முன்பிணை வழங்கி கட்டளையிட்டது.
அதேவேளை குறித்த சட்டத்தரணிக்கு எதிராக ஏற்கனவே நடைபெற்று வரும் காணி வழக்கில் முன்னிலையாக வேண்டும் என்றும் மன்று உத்தரவிட்டது.