SuperTopAds

டி20: முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை வெளுக்குமா இந்தியா?

ஆசிரியர் - Editor II
டி20: முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை வெளுக்குமா இந்தியா?

சென்னை: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. அயர்லாந்தை 2 போட்டிகளில் தேய்த்து அயர்ன் செய்த கையோடு இங்கிலாந்தைச் சந்திக்கிறது இந்தியா. எனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. முதலாவது டி20 போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டி குறித்த ஒரு சிறு அலசல்

சர்வதேச டி20 போட்டிகளுக்கான தர வரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவும், 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக உள்ளது.அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், பைர்ஸ்டோவ் ஆகியோர் முன்வரிசையிலும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் , கேப்டன் மோர்கன் , ஜோ ரூட் ஆகியோர் நடுவரிசையிலும் சிறப்பான பேட்டிங் பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆல் ரவுண்டர்கள் மொயின் அலி மற்றும் டேவிட் வில்லி தேவைப்படும் சமயத்தில் அதிரடியாகவும், சிறப்பாகவும் விளையாடக்கூடியவர்கள்.

இந்திய அணியை பொறுத்தவரை, இங்கிலாந்து அணிக்கு சற்றும் சளைக்காத பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. சமீபத்திய ஐபில் போட்டிகளில் விளையாடியது அவர்கள் அதிரடிக்கு கை கொடுக்கும் என் நம்பலாம். தவான் , ரோஹித் சர்மா , விராட் கோஹ்லி , டோனி , ரெய்னா , ராகுல் மற்றும் பாண்டியா சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி கடும் போட்டி அளிக்கும் என்றே நம்பலாம்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அவர்கள் சுழல் பந்துவீச்சை பெரிதும் நம்பியுள்ளனர். மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் ஆகியோர் அவர்களின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள். ஜோ ரூட்டின் பகுதி நேர பந்துவீச்சு சில சமயங்களில் எடுபடலாம். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை வில்லி , ஜாக் பால் , கர்ரன் மற்றும் பிளங்கெட் இந்திய அணிக்கு சவாலாக இருக்கக்கூடும்.

இந்திய அணியை பொறுத்த வரை குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் நமது பந்துவீச்சில் துருப்புசீட்டு ஆவார்கள். இவர்களின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சு இங்கிலாந்து அணியை தடுமாற வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சுக்கு புவனேஸ்வர் குமார் ,உமேஷ் யாதவ் , சித்தார்த் கவுல் மற்றும் அறிமுக வீரர் தீபக் சாஹர் ஆகியோரை நம்பியுள்ளார் கோஹ்லி. பாண்டியாவின் பந்துவீச்சு கை கொடுக்கும். காயம் காரணமாக பும்ரா இடம் பெறாதது இந்திய அணிக்கு இழப்பேயாகும்.

இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை 5-0 என்ற கணக்கிலும், டி20 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இது அந்த அணிக்கு மன ரீதியாக அதிக தன்னம்பிக்கையை கொடுக்கும். இந்திய அணியை பொறுத்தவரை அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தனது வலிமையை மெருகேற்றிக்கொண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் சமபலம் பொருந்திய இரு அணிகள் விளையாடுவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமேயில்லை..!!