பெண் ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண படமாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர் கைது!
பெண் ஒருவரின் புகைப்படத்தை நிர்வாணமாக எடிட் செய்து போலியான முகநூலை திறந்து, அதில் அந்த படத்தை பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார்.
நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
சந்தேகநபர் வெளிநாடொன்றில் இருந்தபோது பெண்ணொருவரின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டினை கையளித்திருந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தபோது விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் குற்றவாளி என்பதை ஆதாரபூர்வமாக மன்று உறுதிப்படுத்திய நிலையிலேயே நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.