மகனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கூறி தாயிடம் கப்பம் பெற முயன்ற போலி ஆசிரியர் கைது!
தன்னை ஆசிரியர் எனக் கூறி சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தாயாரிடம் தொலைபேசியில் பணம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை செவ்வாய்க்கிழமை (14) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு ரோயல் கல்லூரியின் ஆசிரியர் என தனை அறிமுகப்படுத்தி சிறுவனின் தாயிடம் ஒன்றரை இலட்சம் ரூபா பணம் கோரியுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
இவர் கடந்த 27ஆம் திகதி காலை 8.40 மணியளவில் குறித்த பெண்ணிடம் தொலைபேசி அழைப்பின் மூலம் தனது மகன் அவசர சத்திரசிகிச்சை காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஒன்றரை இலட்சம் ரூபா வைப்பிலிடுமாறும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட தாயின் கணவர் குருந்துவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.